பறவைகளைப் பாதுகாக்க 48 ஆண்டுகளாக வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் தமிழக கிராமம்

பறவைகளுக்காக 48 ஆண்டுகளாக வெடி வெடிக்காத கிராமம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக 48 ஆண்டுகளாக கிராம மக்கள் வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

 • Share this:
  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக 48 ஆண்டுகளாக கிராம மக்கள் வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். அவர்களைக் கவுரவிக்கும் விதமாக சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஜெ.ஜெயகாந்தன் இனிப்பு வழங்கி பாராட்டினார்.

  சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் 38 எக்டேரில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும்  செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சீதோஷண நிலைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் இலங்கை , பாகிஸ்தான், ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், நார்வே, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த  உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீலம் மற்றும் வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்திநாரை, வக்கா போன்ற வகைகளில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன.  இனப்பெருக்கம் முடிந்ததும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மீண்டும் தங்களது இருப்பிடங்களுக்கு இந்த பறவைகள் செல்லும். இவற்றுக்காக கிராமத்தினர் கண்மாய் பகுதியில் வேட்டைக்காரர்களை அனுமதிப்பதில்லை.

  பறவை முட்டைகளைச் சேதப்படுத்தும் குரங்குகளையும் கண்காணித்து விரட்டி வருகின்றனர். மேலும், தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சத்தம் பறவைகளுக்கும் குஞ்சுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் 1972ம் ஆண்டு முதல் 48 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை மற்றும் சுபநிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இதனால் அக்கிராம மக்களைக் கவுரவிக்கும் விதமாக வனத்துறை சார்பில்  மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் இனிப்பு வழங்கி பாராட்டினார். பறவைகளைப் பாதுகாப்பது எங்கள் கிராமத்திற்குக் கிடைத்த பெருமை என கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
  Published by:Rizwan
  First published: