டிக் டாக் வீடியோ வெளியிட்ட பெண்களுக்கு கிராம மக்கள் நூதன தண்டனை!

  • News18 Tamil
  • Last Updated: February 17, 2020, 10:30 PM IST
  • Share this:
தேனி மாவட்டத்தில் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட சகோதரிகளை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர், தனது சகோதரியுடன் சேர்ந்து ஏராளமான வீடியோக்களை டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் டிக் டாக் செயலியில் அவர்கள் வெளியிட்ட வீடியோவிற்கு பதில் அளிக்கும் விதமாக அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத நபர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், சுகந்தி மற்றும் அவரது சகோதரியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி விமர்சனம் செய்தார். இந்த வீடியோ வெளியானதால், கோபமடைந்த நாகலாபுரம் கிராம பெண்கள், பி.சி.பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கத் திரண்டனர். வீடியோ வெளியிட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.


மேலும், டிக் டாக்கில் வீடியோ வெளியிடும் தங்கள் கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி மற்றும் அவரது சகோதரியால் தங்கள் கிராம பெண்கள் அனைவரது பெயரும் கெட்டுப்போவதாகவும், அதனால், சகோதரிகள் இருவரையும் ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும், அல்லது ஒதுக்கி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். கட்டுப்பாடு மிக்க நாகலாபுரம் கிராமம், சுகந்தி மற்றும் அவரது சகோதரியின் டிக் டாக் வீடியோவால், களங்கம் ஏற்படுவதாகவும் குமுறினர். கிராம பெண்களின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

ஏற்கனவே, டிக்டாக் வீடியோ சர்ச்சையில் சிக்கிய சுகந்திக்கும் அந்த நபருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்னை காரணமாக, ஒட்டுமொத்த கிராம பெண்களையும் இழிவாக பேசுவதாக கூறி, சகோதரிகளை ஊரை விட்டு கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதற்காக சுகந்தியையும், அவரது சகோதரியையும் கிராம மக்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்