• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொதுத்தேர்தல் போல் நடைபெற்ற ஊர் நிர்வாகிகள் தேர்தல்: ஓர் அதிசய கிராமம்!

பொதுத்தேர்தல் போல் நடைபெற்ற ஊர் நிர்வாகிகள் தேர்தல்: ஓர் அதிசய கிராமம்!

தேர்தல் நடைபெற்ற வாக்குச்சாவடி

தேர்தல் நடைபெற்ற வாக்குச்சாவடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஊருக்கான நிர்வாக குழு தேர்தல், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் போலவே நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வெளியூர்களில் வசிப்பவர்கள் கணினி மூலம் வாக்களித்த சுவாரஸ்யமும் நடைபெற்றுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் ஊருக்கான நிர்வாகக் குழு தேர்தல், தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் போலவே நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் வெளியூர்களில் வசிப்பவர்கள் கணினி மூலம் வாக்களித்த சுவாரஸ்யமும் நடைபெற்றுள்ளது.

    நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டல் கிராமத்தை நிர்வகிக்கும் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஊர் மக்களால் நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் புதிதாக தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு பலத்த போட்டி எழுந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலைப் போல் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தேர்தல் நடத்தும் அலுவலராக அதே ஊரைச் சேர்ந்த சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தேர்தல் நடைபெறும் தேதி முடிவு செய்யப்பட்டு, வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

    வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களை இந்தத் தேர்தலில் வாக்களிக்கச் செய்வதற்காக இணையதளம் மூலம் வாக்குகளை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதன்படி தேர்தல் நாளான இன்று ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டது. ஊர் மக்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

    தேர்தல் நடத்தும் அலுவலர் பொன்னீலன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பாக அவர்களது முகவர்களும் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் இருந்தனர். காலை 10 மணி முதல் மாலை 4  மணி வரை தேர்தல் நடைபெற்றது. முன்னதாக வெளியூரில் வசிப்பவர்கள் கணினி மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

    வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  திடீரென்று பார்ப்பவர்களுக்கு இது உள்ளூர் தேர்தலா, அல்லது சட்டமன்ற தேர்தலா என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்கு தேர்தல் நடைபெற்றது.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: