தூத்துக்குடி அருகே மழை வேண்டி ’மழைக்கஞ்சி’ வழிபாடு நடத்திய கிராம மக்கள்

விளாத்திகுளம் அருகே மழை வேண்டி மழைக் கஞ்சி வழிபாடு நடத்திய கிராம மக்கள்

விளாத்திகுளம் அருகே மழை வேண்டி கிராம மக்கள் மழைக் கஞ்சி வழிபாடு நடத்தியுள்ளனர்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கே.குமராபுரத்தைச் சேர்ந்த மக்கள் மழை வேண்டி, ‌ வீடு வீடாக உணவு சேகரித்து, முகத்தில்‌ கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி மழைக் கஞ்சி வழிபாடு நடத்தி வருண பகவானை வேண்டினர். மழை பொய்த்துப் போகும்போது மழைக் கஞ்சி வழிபாடு நடத்தினால் மழை பெய்யும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது. கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் உள்ள உணவுகள், உணவு பதார்த்தங்களைப் பெற்று, மழைப்பாடல்,‌ கிராமிய பாடல்கள் பாடி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி ஊர்வலமாக வந்து கிராமத்திலுள்ள கோவில் அல்லது விவசாய நிலத்தில் கிராம மக்கள் மழை வேண்டி வருண பகவானுக்கு வழிபாடு நடத்துவார்கள்.

அதன் பின்னர் சமைத்த உணவு வகைகளை கிராம மக்கள் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். 3 நாட்கள் நடைபெறும் இந்த வழிபாட்டால் மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Also read: ஆன்லைன் ட்ரேடிங் நிறுவனம் நடத்தி சுமார் ₹ 20 கோடி வரை மோசடி என புகார் - ஒருவர் கைதுதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஆவணி மாதத்தில் பெய்த மழையை நம்பி விவசாயிகள் பயிரிடத் தொடங்கினர். ஆனால் தொடர்ந்து மழை பொய்த்துப் போனதால் விதை மற்றும் பயிர்கள் கருகும் நிலை உள்ளது. எனவே, மழை வேண்டி விளாத்திகுளம் அருகே உள்ள கே.குமாரபுரத்தில் அக்கிராம மக்கள் மழைக் கஞ்சி வழிபாடு நடத்தினர். வேடமிட்டு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கிராமிய பாடல்கள் பாடியபடி மக்கள் வீடு வீடாகச் சென்று கம்மங்கஞ்சி, சோளக் கஞ்சி, அரிசிச் சோறு, மிளகாய் வத்தல், சுண்டவத்தல், வெங்காயம் மற்றும் ஊறுகாய் ஆகியவற்றை வாங்கி சேமித்து அங்குள்ள பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.

பின்னர் சேமித்து வைத்த உணவுகளை பொதுமக்களுக்கு வழங்கி ஒன்றாகக் கூடி உணவருந்தினர். மழைக் கஞ்சி வழிபாடு நடத்தியுள்ளதால் நிச்சயமாக மழை பெய்யும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Published by:Rizwan
First published: