விளாத்திகுளம் அருகே சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம் - உப்பள உரிமையாளர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு

சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு உப்பள உரிமையாளர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு.

விளாத்திகுளம் அருகே சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியதற்கு அந்தப் பகுதி பொதுமக்களும் உப்பள உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பார் பகுதியில்  தமிழக அரசின் சிப்காட் அமைக்க  முடிவு செய்துள்ளது. அதற்காக சர்வே நம்பர் 989-ல் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள உப்பளங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களை தமிழக அரசு சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நிலங்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் உப்பளங்கள் மற்றும் கட்டடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. நிலங்களைக் கையகப்படுத்தும் பணி கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் மேற்பார்வையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் மாவட்ட நிர்வாகம் அத்துமீறி செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துலுக்கன் குளத்தைச் சேர்ந்த 110 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர்கள் காலம் முதல் இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உப்பளம் அமைத்து தொழில் செய்து வருவதாகவும், 2019ம் ஆண்டு வரை ரசீது செலுத்தி வந்ததாகவும் கூறுகின்றனர். மேலும், தற்பொழுது உப்பளங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை 3 தலைமுறைகளாக உப்பளம் அமைத்து தொழில் செய்து வரும், தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Also see:

இது தொடர்பாக வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் என்பவர் கூறுகையில், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 12 உப்பள உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டதாகவும் கூறுகிறார்.

மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு இதுவரை பதில் தராமல் தற்போது நிலத்தைக் கையகப்படுத்த முயற்சி செய்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Published by:Rizwan
First published: