Home /News /tamil-nadu /

ரஜினி - கமல் இணைந்து நடிகர் சங்கத் தேர்தலைக் கூட சந்தித்ததில்லை...! விஜயகாந்த் மகன் பரபரப்பு பேச்சு

ரஜினி - கமல் இணைந்து நடிகர் சங்கத் தேர்தலைக் கூட சந்தித்ததில்லை...! விஜயகாந்த் மகன் பரபரப்பு பேச்சு

விஜய பிரபாகரன்

விஜய பிரபாகரன்

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஒன்றாக இணைந்து நடிகர் சங்கத் தேர்தலை கூட சந்தித்தில்லை. இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் சென்னை தெற்கு மாவட்டம் ஆலந்தூர் மேற்கு பகுதி தேமுதிக சார்பில் தேமுதிக கொடி நாள் விழா நடந்தது. மாவட்ட செயலாளர் வேளச்சேரி பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கு இலவச சைக்கிள், பெண்களுக்கு தையல் மிஷன், இஸ்திரி பெட்டிகள், ஹெல்மட், புடவைகளை வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய விஜயபிரபாகரன், “விஜயகாந்த் சூப்பரா, கெத்தா, ஸ்டைலாக இருக்கிறார். அத்திவரதர் வந்து எப்படி பிரளயம் ஏற்பட்டதோ அதுபோல் தமிழக அரசியலில் விஜயகாந்தின் வருகையின் போது ஒரு பிரளயமே இருக்கும்.

குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். விடுபட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் வர போவதால் தைரியமாக இருக்க வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் தேமுதிகவிற்கு இனி ஏறுமுகம் தான். இத்தேர்தலின் வெற்றியை விஜயகாந்த்திடம் சமர்ப்பிக்க வேண்டும். 2021-ல் சட்டமன்ற தேர்தல் வரும் போது எல்லா தொகுதிக்கும் வந்து எழுச்சியை உருவாக்குவர்.

சிம்மாசனத்தில் விஜயகாந்த்தை உட்கார வைக்க பாடுபடுவோம். விஜயகாந்த் மகனாக வர வேண்டும் என்பதில்லை. தொண்டர்களுடன் தொண்டனாக இருக்கவே வந்துள்ளேன். தொண்டர்களையும் கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என்பதே லட்சியம். தேமுதிக வெற்றியையும் தோல்வியையும் சந்தித்துள்ளது. சக்கரம் போல் சுழன்று இனி வெற்றி பெறுவோம். வெற்றிக்கான காலம் வருகிறது. யாரும் தைரியத்தை மட்டும் விட்டுவீட்டாதீர்கள். நீங்கள் இருப்பதால் தான் நாங்கள் இருக்கிறோம்.

நாட்டிற்கு ஒரு நல்ல தலைவர் தேவை. 2005-ல் தேமுதிக அறிவித்த திட்டத்தை ஆந்திராவில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றினால் பாராட்டுகிறீர்கள். தேமுதிக சரியான நிலையை எடுக்கவில்லை என்று எங்களை குறை சொல்லாதீர்கள். மக்கள் சரியான நிலையை எடுத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுடையது.” என்றார்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த விஜயபிரபாகரன், “தேமுதிக ஆரம்பித்த போது தனித்து போட்டியிட்ட கட்சி. அதனால் தேர்தல் நேரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை கட்சி தலைவர், பொருளாளர் மற்றும் கட்சித் தலைமை அறிவிக்கும். கூட்டணியாக இருந்தாலும் தனித்து போட்டியிடுவதாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்.

ராஜ்யசபா உறுப்பினர் குறித்து அதிமுகவிடம் பேசப்பட்டதாக கட்சி பொருளாளர் தெளிவாக கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியும் இது பற்றி கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். ராஜ்யசபா உறுப்பினர் சீட்டை கேட்டு விட்டோம். இனி என்ன நடக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒப்பந்தம் போடப்பட்ட போது என்ன பேசப்பட்டது என்பது அவர்களுக்கு தெரியும். அதிமுக, தேமுதிக தலைமை பேசினால் மக்களுக்கு சரியாக போய் சேரும். ஆளு ஆளுக்கு பேசினால் தேவையில்லாத குழப்பம் சர்ச்சை தான் ஏற்படும்.

ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்து ஒன்றாக நடிகர் சங்க தேர்தலை கூட சந்தித்தில்லை. ஜாம்பவான்களாக உள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிகர் சங்க தேர்தலில் தனித்தோ இணைந்தோ சந்திக்கவே இல்லை. அதுப்போல் மக்கள் மன்றத்தில் தேர்தலில் நடிகர்கள் யார் வேண்டுமானாலும் வந்து ஜெயிக்கலாம். ஆனால் நல்ல மனசு இருந்து மக்களுக்கு ஏதாவது செய்திருக்க வேண்டும்.

இவர்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. விஜயகாந்த் செய்துள்ளதை பார்த்துள்ளேன். அவர்கள் சொல்வது போல் நடக்காது. 2 பேரும் சேர்ந்து செய்தால் செய்யட்டும் அது அவர்களுடைய முடிவு.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கட்சி பொருளாளர் தெளிவாக சொல்லிவிட்டார். நான் ஒரு கருத்தை சொல்லி கட்சிக்குள் தேவையில்லாத சர்ச்சையாகும். பொருளாளர் சொன்னது தான் கட்சியின் கருத்தாகும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: அமைதியை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக ரஜினி கூறினார்...! இஸ்லாமிய மதகுருக்கள் பேட்டி
Published by:Sheik Hanifah
First published:

Tags: DMDK, Vijayakanth

அடுத்த செய்தி