விஜயகாந்த் க்ளைமாக்ஸில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார் - பிரேமலதா

தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம்

கண்டிப்பாக க்ளைமாக்ஸில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்திற்கு வருவோர்  என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோருடன் 68 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும் வகையில் உடனடியாக வேளாண் மசோதா தொடர்பான நன்மைகளை கூற ஒரு குழுவை அமைக்க வேண்டும், தமிழகத்தில் இதுவரை இல்லாமல் பெட்ரோல் டீசல் விலை 90 ரூபாயை தாண்டியுள்ளது அதை உடனடியாக குறைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஆண்களுக்குப் பெண்கள் சமமாக மதுபோதையில் இறங்கியுள்ளார்கள் இதை குறைக்கும் வகையில் தமிழகத்தில் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், தமிழகத்தில் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சரி செய்யக்கோரியும், கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர் நட்டராஜனுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக வெற்றி பெற இனி எல்லா தொகுதிக்கும் நேரடியாக சென்று மக்கள் பணி ஆற்ற வேண்டும். அப்பொழுது தான் நாம் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும். இன்று முதல் தேர்தல் பணி தொடங்கிவிட்டதாகவும்,  ஜனவரி மாதம் பொதுக்குழு, செயற்குழு கூட்டி தலைவர் விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பார்” என்று கூறினார்.

மேலும்  பேசிய அவர், “வருகின்ற தேர்தல் தமிழகத்தின் முக்கியமான தேர்தல். விஜயகாந்த் முன்பு இருந்த அளவுக்கு சுறுசுறுப்பாக இல்லை. ஆனால் நிச்சியம் க்ளைமாக்ஸில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார். இதற்குமேல் கேப்டன் புதுசாக பேசுவதற்கும், செய்வதற்கும், செல்ல வேண்டிய ஊரும் விஜயகாந்த்க்கு புதிதல்ல. வாழ்ந்தால் விஜயகாந்த்  மாதிரி வாழவேண்டும் என்று சொல்வதுபோல் அவர் வாழ்ந்திருக்கிறார். தேமுதிகவின் தேர்தல் பிரசாரம் தமிழகம் முழுவதும் இருக்கும். விஜயகாந்தின் பிரசார பயண திட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.
Published by:Sheik Hanifah
First published: