மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பே உறுதியான நடவடிக்கை வேண்டும் - தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  கர்நாடாகாவின் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு முயற்சி செய்துவருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடிதம் எழுதினார்.

  அதற்கு பதில் கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின், ‘மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும். அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகள் இதற்கு ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்’ என்று கடிதம் எழுதினார். அதனையடுத்து, இந்த விவகாரம் இரு மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேகதாது அணை கட்டுவதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்து கர்நாடாக மாநிலத்தில் மு.க.ஸ்டாலினின் உருவப்படத்தை கோரமாக சித்தரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதற்கிடையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதியளிக்கக் கூடாது’ என்று வலியுறுத்தினார். இந்தநிலையில், ‘மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை காவேரி ஆற்றின் குறுக்கே சட்டத்திற்குட்பட்டு கர்நாடகா செயல்படுத்தும் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களுக்கு அறிக்கையாக வழங்கியுள்ளார்.

  இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த துரைமுருகன், ‘தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்தநிலையில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து அணை கட்டாமல் தடுத்திடவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: