சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமை செயலக காலனி போலீசாரால் 18ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அன்று இரவே அவர் விசாரணையின் போது உயிரிழந்தார்.
இந்த வழக்கானது கடந்த மாதம் 24ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்வதாக அறிவித்தார்.
இந்த வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பின் இந்த வழக்கில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டமும் சேர்க்கப்பட்டது.
சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் காவல்துறையினர் விக்னேஷை லத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது அம்பலமானது.
இதனையடுத்து A1 குற்றவாளியாக காவலர் பவுன்ராஜ், A2 குற்றவாளியாக தலைமை காவலர் முனாஃப், A3 குற்றவாளியாக சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், A4 குற்றவாளியாக ஊர்க்காவல் படை வீரர் தீபக், A5 குற்றவாளியாக ஆயுதப்படை காவலர் ஜெகஜீவன், A6 குற்றவாளியாக ஆயுதப்படை காவலர் சந்திரகுமார் ஆகியோரை அதிரடியாக கைது செய்து சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர்.
Also read... குரூப் 1 தேர்ச்சி பெறுவோருக்கு ஐஏஎஸ் அந்தஸ்து.. தமிழ்நாடு ஆட்சிப் பணி அமைக்க நீதிமன்றம் ஆலோசனை!
இந்தநிலையில் விக்னேஷ் கொலை வழக்கில் இன்னும் யார் யாருக்கு தொடர்புள்ளது? விக்னேஷ் கொலைக்குப் பிறகு பதியப்பட்ட FIR-ன் உண்மைத்தன்மை என்ன? என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சிபிசிஐடி போலீசார் விசாரணையில் விக்னேஷ் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் கொல்லப்பட்டதும் அயனாவரம் காவல் உதவி ஆணையர் சரவணன் அழுத்ததின் பேரில் உதவி ஆய்வாளர் புகழும் பெருமாளை வைத்து விக்னேஷ் மற்றும் சுரேஷ் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டதும், அந்த பொய் புகாருக்கு தலைமை செயலக காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில் குமார் FIR பதிந்ததும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் அயனாவரம் உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கும், காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை தென் மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விக்னேஷ் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக 4 வாரத்திற்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அயனாவரம் காவல் உதவி ஆணையர் சரவணன் மற்றும் தலைமை செயலக காலனி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.