அரசுப் பேருந்துகளில் திருநங்கையர்களையும் இலவசமாக அனுமதிக்க வேண்டும் - விடுதலைச் சிறுத்தைகள் எம்.பி ரவிக்குமார் கோரிக்கை

திருநங்கைகள் Image credit: AJP / Shutterstock.com

அரசுப் பேருந்துகளில் திருநர்களுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தின் முதல்வராக நேற்று மு.க.ஸ்டாலின் பதவிப்பிரமானம் எடுத்து பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்றபின் தலைமைச் செயலகத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், ‘அங்கு முதல் கையெழுத்தாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுதிட்டுள்ளார். இந்த தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்றும், முதல்கட்டமாக ரூ.2000 இந்த மாதமே வழங்கப்படும் என்ற கோப்புகளில் கையெழுத்திட்டார்.

    அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.

    அதனையடுத்து, பெண்களைப் போல திருநங்கையர்களும் இலவசமாக பயணிக்க உத்தரவிட வேண்டும் என்று திருநங்கையர்கள் கோரிக்கைவைத்தனர். இந்தநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி ரவிக்குமாரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘திருநங்கையருக்கும் பேருந்தில் கட்டணமில்லாப் பயணத்தை அனுமதிக்கவேண்டும்.

    தமிழக அரசின் போக்குவரத்துக்கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த சலுகையை திருநங்கையருக்கும் விரிவுபடுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். திருநங்கையருக்கு 2008 ஆம் ஆண்டில் நலவாரியம் அமைத்து இந்தியாவுக்கே வழிகாட்டியது தி.மு.க அரசு. அதுபோலவே இதிலும் முன்னுதாரணமாகத் திகழவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: