தீர்ப்பை வரவேற்கிறோம்.. விரிவான அமர்வு அமைத்து சமூகநீதியை நிலைநாட்டவேண்டும் - தொல். திருமாவளவன்

‘இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை’ என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து சீராய்வு செய்வதற்கு மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

தீர்ப்பை வரவேற்கிறோம்.. விரிவான அமர்வு அமைத்து சமூகநீதியை நிலைநாட்டவேண்டும் - தொல். திருமாவளவன்
விசிக தலைவர் தொல். திருமாவளவன்
  • Share this:
அருந்ததியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். விரிவான அமர்வை (Larger Bench) விரைவில் அமைத்து சமூகநீதியை நிலைநாட்டவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது அறிக்கையில், “உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு (Constitutional Bench) இன்று அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் அருந்ததியர் இடஒதுக்கீடுக்குப் பாதிப்பு ஏதுமில்லை. இதனை விசிக சார்பில் வரவேற்கிறோம். இது இறுதித் தீர்ப்பாக இல்லை. கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட விரிவான அமர்வுக்கு வழக்கை அனுப்பத் தீர்மானித்துள்ளது. அத்துடன், இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

மேலும் படிக்க: தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை தொடக்கம்: இந்த ஆண்டு 1.15 லட்ச இடங்கள் அறிவிப்பு


பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பட்டியலினத்தவருக்குள் உள் ஒதுக்கீடு செய்து இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளால் சட்டங்கள் இயற்றப்பட்டன. அந்த சட்டங்கள் செல்லுமா? அவ்வாறு சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்ற வினாக்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.சின்னையா -எதிர்- ஆந்திரப்பிரதேசம் என்ற வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இப்படி சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை எனவும்; எஸ்சி மற்றும் எஸ்டி பட்டியலில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது; அதில் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இப்போது தீர்ப்பு வழங்கியுள்ள அமர்வும் ஐந்து நீதிபதிகள் கொண்டது. ஏற்கனவே ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை இது மாற்ற முடியாது என்ற காரணத்தினால் கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை அனுப்பவேண்டும் என்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், காலம் தாழ்த்தாமல் விரிவான அமர்வை அமைத்து இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு விரைந்து கிடைத்திட தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.இந்தத் தீர்ப்பை வழங்கும் போது ‘இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அதுபோலவே மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கும் இந்தக் கல்வி ஆண்டிலேயே மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

‘இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை’ என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து சீராய்வு செய்வதற்கு மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading