"விடுதலை போரில் தமிழகம்" என்ற தலைப்பில்
சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் இடம்பெற உள்ளன. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன்,
திருப்பூர் குமரன், காயிதே மில்லத்,
பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் உருவங்கள் இடம்பெற உள்ளன.
ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் 75வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி புது டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், மத்திய அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இடம்பெறும் எனவும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ‘விடுதலை போரில் தமிழகம்" என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெறவுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் முக்கிய துறைகளின் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பள்ளிக்கல்வி, கூட்டுறவு வேளாண் என 17 துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன.
ஆனால் இந்தாண்டு தமிழகத்தில் இருந்து விடுதலைக்காக போராடிய வீரர்களை கொண்டாடக் கூடிய வகையில் அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு இடம்பெற உள்ளன.
இதில், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், வேலுநாச்சியாரின் படைத் தளபதி குயிலி, மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், ஒண்டிவீரன் அழகு முத்து கோன், வீரன் சுந்தரலிங்கம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், இரட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், காமராஜர், ராஜாஜி, பெரியார், காகிதமில்லத், J.C. குமாரபசிவா, சுப்பிரமமணிய சிவா, ராகவாச்சாரி உள்ளிட்ட தலைவர்களின் உருவங்கள் இடம்பெற உள்ளன.
மொத்தம் 4 ஊர்திகள் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறவுள்ளன. ஒன்று மங்கல இசை ஊர்தி. எஞ்சிய மூன்று ஊர்திகள் "விடுதலைப் போரில் தமிழகம்" என்ற தலைப்பில் இடம்பெறவுள்ளன. இந்த அலங்கார ஊர்தியில் சுதேசி கப்பல், வேலூர் கோட்டை, வள்ளுவர் கோட்டத்தேர், காளையார் கோவில் உள்ளிட்ட மாதிரிகளும் இடம்பெற உள்ளன.
இவற்றை வடிவமைக்கும் பணிகள் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்று வருகிறது. நிபுணத்துவம் வாய்ந்த சிற்பிகள் இவற்றை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை இந்த பணிகள் முழுமையாக முழுமைபெறும்.
குடியரசு தின அணிவகுப்பிற்கு பின் கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு மக்கள் பார்வைக்கு அலங்கார ஊர்திகள் கொண்டு செல்லப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.