ஹெச்.ராஜாவை கைது செய்யாவிட்டால் மெரினாவில் போராட்டம் வெடிக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கூட்டமையின் சார்பில் நெல்லை கண்ணன் கைது செய்ததை கண்டித்து அவசர ஆலோசனை கூட்டம் சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுக து.பொதுச்செயலாளர்
மல்லை சத்யா, ஜவாஹிருல்லா, முத்தரசன், சுபவீரபாண்டியன், வ.கெளதமன் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேல்முருகன், பாஜகவின் தொடர் அழுத்தத்தின் காரணமாக அவர்கள் கொடுத்த கெடு நேரத்திற்குள் நெல்லை கண்ணன் கைது செய்யபட்டது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.
மேலும், நெல்லை கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது என்றும் வேலுமுருகன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வேல்முருகன் ஹெச்.ராஜா பிற கட்சியினரை அவதூறாக பேசுவதை கண்டிக்கிறோம் அவர் மீது பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் போராடிய ஹெச்.ராஜா-வை கைது செய்யவில்லை என்றால் நாங்களும் மெரினாவில் கூடி போராடுவோம் என்றும் தெரிவித்தார்.
உள்நோக்கமின்றி எதார்த்தமாக பேசிய நெல்லை கண்ணனை கைது செய்ய சொல்லும் பாஜக, பெயரை குறிப்பிட்டு தாக்கி பேசிய ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூரில் நெல்லை கண்ணனை கைது செய்யும் போது பாஜகவின் குண்டர் படையோடு சென்று கைது செய்துள்ளது. காவல்துறை பாஜகவினரை உள்ளே அனுமதிக்காமல் கைது செய்திருக்க வேண்டும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஹெச்.ராஜா, வைகோ-வை பார்த்து உயிரோடு நடமாடமுடியாது என கூறியுள்ளார். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டு எறியப்படும் என்று பேசியிருக்கிறார், துணை முதல்வர் ஒ.பி.எஸ்-ஐ நேரிடையாக குருமூர்த்தி பேசியுள்ளார். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது இந்த ஆளும் அரசு. ஹெச்.ராஜாவை கைது செய்யவில்லையென்றால் அவருக்கு எதிராக திடீரென மெரினாவில் போராட்டம் நடத்துவோம் என்றும் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், நெல்லை கண்ணன் மிகச்சிறந்த பேச்சாளர் நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அதை போல் தான் அமித்ஷா சோலியை முடித்து விட்டால் எல்லாம் முடிந்து விடும் என நகைச்சுவையாக கூறினார்.
அதை அங்குள்ளவர் ஆதரித்தால் கோஷம் எழுப்பிவிடுவார்கள். ஆனால் அனைவரும் சிரித்து விட்டு கலைந்து சென்று விட்டனர். மெரினாவில் யாரும் நான்கு பேருக்குமேல் கூட முடியாது. ஆனால் பாஜகவினர் பேரணியே நடத்தியுள்ளனர். காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை பாஜகவினர்க்கு அஞ்சுகிறதா தமிழக அரசு என எண்ணத்தோன்றுகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நெல்லை கண்ணன் அதிகாரமாக பேசவில்லை அவர் அதிகாரத்தை பறித்து விடுங்கள் என்று தான் பேசினார். இதுவரை பலமுறை ஹெச்.ராஜா நேரிடையாக தாக்கி பேசியுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் இல்லையெனில் அவர்களை போலவே மெரினாவில் கூடுவோம் என எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனை தொடர்ந்து பேசிய முத்தரசன், தமிழக அரசு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை போல் செயல்படவேண்டும். தமிழக அரசுக்கும் காவல்துறைக்கு உத்தரவிடுகிறார் ஹெச்.ராஜா என்றார்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Nellai kannan, Vel Murugan