முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தருவதற்கு கூட பாஜக தயாராக இருக்கிறது... ஆனால்... - வேல்முருகன் அதிரடி

திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தருவதற்கு கூட பாஜக தயாராக இருக்கிறது... ஆனால்... - வேல்முருகன் அதிரடி

வேல்முருகன்

வேல்முருகன்

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் சமூக நீதிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகின்றனர் என்று திருமாவளவன் கூறினார்.

  • Last Updated :

சிதம்பரத்தில் நடைபெற்ற திருமாவளவன் பிறந்த நாள் விழாவில், காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய வேல்முருகன், திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தருவதற்கு கூட பாஜக கும்பல் தயாராக இருக்கிறது. ஆனால் சங்பரிவார் போன்ற மதவாத அமைப்புகளிடம் திருமாவளவன் ஒருபோதும் அடி பணிய மாட்டார் என்று கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் பிறந்த நாள் விழா, சிதம்பரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. சமூக நீதி சங்கங்களின் ஒற்றுமை என்ற பெயரில் இசை அரங்கம், வாழ்த்தரங்கம் என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் பால அறவாழி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளரும், காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். அவரைப் பாராட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருமாவளவனை வாழ்த்தி பேசினர்.

திருமாவளவனை வாழ்த்திப் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒரு நல்ல தலைவரை பெற்றிருக்கின்றார்கள். பொதுக்கூட்டம், மாநாடு, இலக்கிய கூட்டம் போன்ற ஒவ்வொன்றிலும் எப்படி பேச வேண்டும் என்று தெளிவு பெற்ற பேராசிரியரின் பேச்சைப்போல திருமாவளவன் பேச்சுக்கள் உள்ளது. அம்பேத்கருக்கு பிறகு இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக போராடிக் கொண்டிருப்பவர் திருமாவளவன்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட போது இந்திய நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் அல்லாத ஒரு தலைவர் பேசினார் என்றால் அது திருமாவளவன்தான். இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது ஆயிரமாயிரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கொண்டு வந்து போராட்டம் நடத்தியது திருமாவளவன்தான்.

நான் சார்ந்திருக்கிற வன்னியர் சமூகத்தில் உள்ள பாலாஜி என்பவரை திருமாவளவன் கைகாட்டி அவரது கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியிருக்கிறார். திருமாவளவன் அடையாளம் காட்டுகிறார். அந்த தொகுதியில் உள்ள அத்தனை சாதி மக்களும் வாக்களிக்கிறார்கள். சமூகநீதி அரசியலுக்குள் வந்து நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.

உலகின் அத்தனை பிரச்சனைகளையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு பேசக்கூடிய தலைவர் திருமாவளவன். திருமாவளவன் படம் எல்லா இடங்களில் இருக்கிறது. ஆனால் அதில் பலரும் ஒட்டு போடுவதில்லை. அந்த சமூகத்து மக்கள் திருமாவளவனை தங்கள் சமூகத்திற்கான பாதுகாப்பாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் வாக்களிப்பதில்லை.

திருமாவளவனை நான் கட்டிப்பிடித்து படம் எடுத்தால் சிலருக்கு எரிகிறது. அதையே ராமதாஸ் செய்தால் வரவேற்கிறார்கள். வேல்முருகன் செய்தால் எதிர்க்கிறார்கள். திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தருவதற்கு கூட பாஜக கும்பல் தயாராக இருக்கிறது. ஆனால் சங்பரிவார் போன்ற மதவாத அமைப்புகளிடம் திருமாவளவன் ஒருபோதும் அடி பணிய மாட்டார். திருமாவளவனோடு சரி சமமாக விவாதிக்கிற ஒரு அறிவுஜீவி கூட தமிழக பாஜகவில் இல்லை என வேல்முருகன் எம்எல்ஏ பேசினார்.

பின்னர் பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டு திருமாவளவன் ஏற்புரையில் பேசுகையில், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் சமூக நீதிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகின்றனர். வெளிப்படையாக பேசாமல் சமூகநீதியை அழிப்பதற்கான அனைத்தையும் செய்கின்றனர். சாதிவெறியைத் தூண்டி மதவெறியை வளர்க்கிறார்கள். அதனால் சமூகநீதிக்கான சங்கங்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. எந்த சாதியாக இருந்தாலும் கோயில் கருவறைக்குள் நுழைய முடியாது. பார்ப்பனர்கள் மட்டும்தான் கோவிலுக்குள் நுழைய முடியும் என்று இருந்தது.

எல்லோரும் இந்து என்கிறார்கள். ஒரு தரப்பினர்  கோயிலுக்கு உள்ளேயும், மற்றவர்கள் நிற்பதுதான் சனாதனம். எந்த சாதியாக இருந்தாலும் ஆகம விதிகளை கற்றுக்கொண்டால் கருவறைக்குள் நுழைய முடியும் என்கிற கோட்பாடுதான் சமூகநீதி. பிற்பட்ட சமூகத்தினருக் இட ஒதுக்கீடு தரும்போது இந்தியாவில் எந்த ஒரு தலித் சமூகமும் எதிர்க்கவில்லை. ராம்தாஸ் அத்வாலே, கன்ஷிராம், மாயாவதி உள்ளிட்ட எந்த தலைவர்களும் எதிர்க்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றது. இன்னும் கூடுதலாக வேண்டும் என்று கேட்டோம்.

மண்டல் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்றபோது அதை எதிர்த்து வீதிக்கு வந்து போராடியது யார்? மருத்துவர் ராமதாசை பார்த்து நான் கேட்கிறேன். மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையை நடத்தியது பிஜேபிதான். எந்த சமூகமும் படித்து, நல்ல வேலைக்கு வந்து விடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது பிஜேபி. அத்வானி தலைமையில் அன்றைக்கு மிகப் பெரிய வன்முறை நடந்தது. ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் எதிரியா? அதை ஆதரித்தவர்கள் எதிரியா?

எப்படி உங்களால் பாஜகவோடு செல்ல முடிகிறது. எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் உறவாட முடிகிறது. சமூகநீதிக்கு எதிரான கட்சி பாஜக. நாம் திமுகவை ஆதரித்தோம்.  திமுக கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை சிதறடித்து அதன் மூலம் அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் அது அதிமுக ஆட்சியாக இருந்திருக்காது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாகத்தான் இருந்திருக்கும். அதன் மூலம் மிகப்பெரிய ஆபத்தை தமிழ்நாடு சந்தித்திருக்கும். அதிமுக ஆட்சி மட்டும் மீண்டும் வந்திருந்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அதிமுக பாஜகவாக மாறி இருக்கும்.

Must Read : வைகோ மகனுக்கு மதிமுகவில் பொறுப்பு: திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவா இப்படி?

top videos

    தலித், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இயக்கங்கள் போன்ற இயக்கங்களாக உள்ள சமூக நீதி சங்கங்கள் இந்தியா முழுவதும் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்த முடியும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர முடியாமல் தடுக்க முடியும். மீண்டும் மதவெறி மற்றும் சனாதன சக்திகளின் கைப்பிடியில் இந்த நாடு சிக்கினால் அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு, மனு தர்மத்தை சட்டமாக, ஆட்சி அதிகாரமாக கொண்டு வந்து விடுவார்கள். ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என என்ற நிலையைக் கொண்டு வருவார்கள். எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் தான் மோடி இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

    First published:

    Tags: BJP, Thirumavalavan, VCK, Velmurugan