HOME»NEWS»TAMIL-NADU»velmurugan said bjp while praising the friendship with the aiadmk intends to destroy vin tam
நட்பு பாராட்டிக் கொண்டே அ.தி.மு.கவை பாஜக அழிக்க நினைக்கிறது - வேல்முருகன்
எடப்பாடியின் தன்னிச்சையான நடவடிக்கையால் அதிமுகவில் பல தலைவர்கள் அதிருப்தில் இருக்கிறார்கள். இந்த தேர்தலை அவர்கள் ஒற்றுமையாக சிந்திப்பார்களா என்பதே சந்தேகம் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியின் தன்னிச்சையான நடவடிக்கையால் அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதாகவும், அதிமுகவிடம் நட்பு பாராட்டிக் கொண்டே அதிமுகவை பாஜக அழிக்க நினைக்கிறது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வேளாண் சட்டம் மற்றும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ‘வேளாண்மை சட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது. கேஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளின் விலையை ஏற்றி ஏழை எளிய மக்களின் வாழ்வை நசுக்குகிறது.
அதிமுக அரசு மக்கள் நலனின்றி சுயநலத்தோடு செயல்படுகிறது. இந்த தேர்தலோடு அதிமுக என்ற ஒரு கட்சி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆளும் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் எதிர்க்கட்சியினர் நடத்தும் கூட்டங்களுக்கு தடை விதிக்கிறது.
மேலும், எடப்பாடியின் தன்னிச்சையான நடவடிக்கையால் அதிமுகவில் பல தலைவர்கள் அதிருப்தில் இருக்கிறார்கள். இந்த தேர்தலை அவர்கள் ஒற்றுமையாக சந்திப்பார்களா என்பதே சந்தேகம்.
ஒரு புறம் நட்பு பாராட்டுகிறோம் என்று பாஜக கூறிக்கொண்டு பழனிசாமி தலைமையிலான அரசை கொள்ளைக் கூட்டம் என்றெல்லாம் விமர்சனம் செய்கின்றார்கள். ஆனால் அதற்கு அமைச்சர்களோ, முதலமைச்சரோ முறையான பதிலடி கொடுக்க மறுக்கிறார்கள். இது தமிழக மக்களுக்கும் தமிழினத்திற்கும் ஏற்பட்ட அவமானம் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.