முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருப்பூரில் பீகார் குழு ஆய்வு செய்வது தமிழக அரசை இழிவுபடுத்தும் செயல்- வேல்முருகன் கண்டனம்

திருப்பூரில் பீகார் குழு ஆய்வு செய்வது தமிழக அரசை இழிவுபடுத்தும் செயல்- வேல்முருகன் கண்டனம்

வேல்முருகன்

வேல்முருகன்

migrant labourers | தமிழ்நாட்டில் பீகார் குழு ஆய்வு செய்வதற்கு வேல் முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக பீகார் குழு வந்தது தமிழ்நாடு அரசை இழிவுபடுத்தும் செயல் என்று வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், ‘உத்தரப்பிரதேச பாஜகவின் செய்தித் தொடர்பாளரான பிரசாந்த் உமாராவ் இந்தியில் பேசியதற்காகவே தமிழ்நாட்டில் 12 பீகார் தொழிலாளிகள் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற பொய் செய்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளார். இதற்கு வடமாநில ஊடகங்களும் துணை போயுள்ளன.

அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டை, உலக அரங்கில் வன்முறை மாநிலமாக காட்டும் முயற்சி என்பதோடு, இவ்விவகாரத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதி திட்டம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டு மக்கள், தங்களின் சொந்த மண்ணில் பிற மாநிலத்தவர்களிடம் அடி வாங்கியும், தங்களது உரிமைகளையும் இழந்து வருகின்றனர். இதற்கு மேலாக, ஈரோட்டில் காவல்துறையே வடமாநிலத்தவர்களிடம் அடிவாங்கிய நிகழ்வுகளெல்லாம் உண்டு.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு கஷ்டபடுவதாக கவலைப்படும் இடதுசாரிகள், வடமாநிலத்தவர்களால் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்தும், கொலை செய்யப்படுவது குறித்தும் கவலையில்லை.

தமிழர் தாயகம் பாதுகாக்க வெளியார் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்; தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடும், மாநில அரசு நிறுவனங்களில் 100 விழுக்காடும், தனியார் நிறுவனங்களில் 100 விழுக்காடு பணியும் வழங்க வேண்டும் என கோரினால், இது இனவெறி என கொச்சைப்படுத்துவது. இது தான் வலதுசாரி, இடதுசாரிகளின் ஒருமித்த கருத்து.

தமிழ்நாட்டில் 12 பீகார் தொழிலாளிகள் அடித்துக் கொல்லப்பட்டதாக பரப்பிய வதந்திக்கு, தமிழ்நாடு முதல்வரும், காவல்துறையும் உரிய விளக்கம் அளித்தும், பீகார் மாநில அரசு, இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்றை தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது; தமிழ்நாடு அரசை இழிவுப்படுத்துவது.

1991ல் காவிரி விவகாரத்தில், கர்நாடகத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு, 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர். அப்போதும், கர்நாடகத்துக்கு எந்தவொரு குழுவும் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பவில்லை. முல்லைப்பெரியாறு அணை விவகாரத்திலும், கேரளாவில் இருந்து ஏராளமான தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டனர். அப்போதும் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு எந்த குழுவும் அனுப்பவில்லை.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போதும், எந்தவொரு குழுவும் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பவில்லை. இது போன்ற எண்ணற்ற துயரங்களில் தமிழர்கள் சிக்கி சின்னபின்னமாகி இருக்கின்றனர். ஆனால், டெல்லி, உத்தரபிரதேசத்தில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலை சேர்ந்தவர்கள் பரப்பிய வதந்திக்காக, பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு குழு அனுப்பி வைப்பது எந்த வகையில் நியாயம். தமிழ்நாடு முதல்வர் உரிய விளக்கம் அளித்தும், அதனை பொருட்படுத்தாமல், குழு அனுப்பி வைப்பது தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிடும் செயலாகாதா? பீகாரின் அரசின் இத்தகைய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு வன்மையாக கண்டிக்க வேண்டுமே தவிர, இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை அதிகப்படுத்தும் வகையில், உத்தர் பாரத் பவன் அமைக்கப்படும் என மத்திய அரசு கூறுகிறது. இதன் மூலம், வடமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர்கள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் இதற்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருக்கிறது.

மத்திய அரசின் இத்தகைய சதி திட்டம், தமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கும் முயற்சியே தவிர, வேறோன்றுமில்லை. இந்தியை திணிக்க முடியாத ஆண்ட காங்கிரசு அரசும், ஆளும் பாஜக அரசும், தற்போது இந்திக்காரர்களை திணிக்க முயன்று வருகிறது. இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல், பிறமாநிலத்தவர்களை கட்டுப்படுத்த கோரும் அரசியல் கட்சிகளை, இயக்கங்களை இனவெறி என கொச்சைப்படுத்துவது; மனிதம் செத்து விட்டது என வேதனைப்படுவது. இக்கருத்தில் வலதுசாரி, இடதுசாரி என பேதமில்லாமல், ஒருபுள்ளியில் இணைந்து நிற்கிறது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் இயக்கங்களும் கூறி வருகிறதே தவிர, வடமாநிலத்தவர்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டும் என சொல்லவில்லை.

எனவே, தமிழ்நாட்டில் எந்த வடமாநிலத்தவர்களையும், தமிழர்கள் அடித்து விரட்டவில்லை; பாஜக- ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதித்திட்டத்தால், அவர்கள் வெளியேறுகின்றனர். மற்றொரு பகுதியினர், ஹோலி பண்டிகையை கொண்டாட புறப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, தமிழ்நாட்டில் படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டிய பொறுப்பு, தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கிறது.

இதற்காக, தமிழ்நாடு வேலை வழங்கும் வாரியம் என்ற தனித்துறையை உருவாக்கி, தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில், தமிழ்நாட்டு இளைஞர்களின் தகுதிகேற்ப வேலைவாய்ப்பை வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கே 75 விழுக்காடு வேலைவாய்ப்பு என்ற சட்டம் இயற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தமிழ்நாட்டில் பாஜக வளர நினைக்கிறது. பாஜகவின் இத்தகையை சதி திட்டம் முழுமையாக நிறைவேறும் காலத்தில், பெரும் கட்சிகளாக விளங்கும் திமுகவும், அதிமுகவும் காணாமல் போகும்.

புலம்பெயர் தொழிலாளர் விவகாரம்.. கே.எஸ்.அழகிரியின் கருத்துக்கு காட்டமாக பதிலளித்த சீமான்..

தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் சீரழிந்து, மண்ணின் மக்கள் தங்களின் சொந்த தாயகத்தை இழந்து, அரசியல் அனாதைகளாக நிற்போம். இதற்கான சான்றுகளாக, திரிபுரா, அசாம், நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் திகழ்வதை தமிழ்நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக்காட்டுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Bihar, Migrant Workers, Velmurugan