வேலூர் தேர்தல்: திடீர் திருப்பங்கள்... த்ரில்லான வாக்கு எண்ணிக்கை

வேலூர் தேர்தல்: திடீர் திருப்பங்கள்... த்ரில்லான வாக்கு எண்ணிக்கை
திமுக வெற்றி
  • News18
  • Last Updated: August 9, 2019, 11:12 PM IST
  • Share this:
வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்ததால், 2 கட்சியினர் மத்தியிலும் இறுதி வரை பதற்றம் நிலவியது.

வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நொடி முதல் அதிமுக, திமுகவினருக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போதே, அதிமுகவின் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். இதனால் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலையிலேயே கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கின.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் ஏ,சி.சண்முகத்தை பின்னுக்குத் தள்ளி, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முந்தினார். அதன்பிறகு இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால், கடும் போட்டி நிலவியது.


காலை 10 மணியளவில் கதிர் ஆனந்தை விட, ஏ.சி.சண்முகம் 9,000 வாக்குகள் கூடுதலாக பெற்று மீண்டும் முன்னிலை வகித்தார். ஆனால் அதன் பிறகு இருவருக்குமான வித்தியாச வாக்குகள் படிப்படியாக குறையத் தொடங்கின. இதனால் ராயப்பேட்டை அலுவலகம் களையிழந்து வெறிச்சோடியது.

தொடர்ந்து அதிமுகவும், திமுகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னும் பின்னுமாக ஏற்றம், இறக்கத்தை கண்டன. இதனால் இரு கட்சிகளுக்கு மத்தியிலும் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக்கொண்டது. நண்பகல் 12 மணியளவில் ஏ.சி.சண்முகத்தை விட சுமார் 8,000 வாக்குகள் கூடுதலாக பெற்று, கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதனால் அண்ணா அறிவாலயத்திலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.

அதன்பின்னர் தொடர்ந்து திமுகவின் கை ஓங்கியது.  இறுதியில்  8,141 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் கதிர் ஆனந்த் வெற்றி வாகை சூடினார்.
First published: August 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்