ஒரு குறிப்பிட்ட இடத்தை சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது. 1999ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புவிசார் குறியீட்டு சட்டம் 2003ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் சம்பந்தப்பட்ட பொருளை வேறு யாரும் வியாபார நோக்கத்துக்காகவோ போலியாகவோ பயன்படுத்துவதை தடுக்க முடியும். இதுபோல தமிழ்நாட்டில் பல பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
இந்த நிலையில் வேலூர் இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழில் இலவம்பாடி முள் கத்திரிக்காய் என்று அழைக்கப்படும் வேலூர் முள்ளந்தண்டு கத்தரி, ஒரு அரிய முட்கள் நிறைந்த நாட்டு கத்தரிக்காய் இனமாகும். இளஞ்சிவப்பு நிறத்துடன் கலந்த ஊதா நிறத்தில் பளபளப்பாக காணப்படும்.
ஒரு கத்தரிக்காயின் சராசரி எடை 40 கிராம் இருக்கும். இவற்றில் புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது மற்ற கத்தரி வகைகளை விட சுவையாக இருக்கும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை எதிர்க்கும் தனி சக்தி இந்த கத்திரிக்காய் இனத்திற்கு உண்டு. செடியின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் முட்கள், பயிரை மிகவும் தனித்துவமாகவும், அடையாளம் காணக்கூடியதாகவும் ஆக்குகிறது.
இந்த முள் கத்திரிக்காய் மென்மையாகவும், சதைப்பற்றுள்ளதாகவும் உள்ளது. மேலும் இது கொத்தாகத் தொங்கும் இது 140-150 நாட்களில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 40-45 டன்கள் மகசூல் தரும். வேலூர் முள்ளு கத்தரிக்காயை சுடலாம், பார்பிக்யூட் செய்யலாம், வறுக்கவும், வேகவைக்கவும் அல்லது ஊறுகாய்களாகவும் செய்யலாம். இந்த வகை கத்திரிக்காய் வறட்சி மற்றும் அதிக வெப்பநிலையை தாங்கும் திறன் கொண்டதாகும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வேலூர் உழவர் சந்தை தொடங்கி வைக்கும் போது, குறிப்பாக வேலூர் முள்ளங்கி கத்தரிக்காயை குறிப்பிட்டு அதன் அரிய குணங்களை விவரித்ததார். அதிலிருந்து கலைஞர் கருணாநிதி சுவைத்து சாப்பிட்ட இலவம்பாடி கத்தரிக்காய் என்றும் பெயர் இதற்கு உண்டு.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட இலவம்பாடி, ஈச்சங்காடு, பொய்கை புதூர் மற்றும் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 தலைமுறைக்கும் மேலாக முள்ளு கத்தரிக்காய் சாகுபடியை செய்து வருகின்றனர். மேலும் இங்கு அறுவடை செய்யப்படும் முள் கத்திரிக்காய் வேலூர் ஒருங்கிணைந்த காய்கறி மார்கெட்டில் இருந்து சோளிங்கர், செய்யாறு, திருவண்ணாமலை, ஆரணி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்படுகிறது. அதேபோல், சென்னைக்கும் இலவம்பாடி கத்தரிக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை நடந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலவம்பாடி முள் கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளதற்கு விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.