அனுமதியின்றி செயல்பட்டு வந்ததாகக் கூறி துரைமுருகனுக்குச் சொந்தமான குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் எடுக்கும் தொழிலில் ஆயிரத்து 650 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 460 ஆலைகள் இயங்கி வருகின்றன. ஆனால், அதில் 80 விழுக்காடு ஆலைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து , வருகின்ற 3-ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆலைகளைக் கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்குச் சொந்தமான குடிநீர் ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. காட்பாடி அடுத்த உள்ளிபுதூர் கிரமாத்தில் முன்னாள் அமைச்சரும், திமுக பொருளாளருமான துரைமுருகனின் அருவி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை உள்ளது. இந்த ஆலை அனுமதியின்றி செயல்பட்டதாகக் கூறி பொதுப்பணித் துறையினர் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் குடிநீர் ஆலையின் நீர் உறிஞ்சும் பம்புக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.