• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவை டூ வேலூர்... கைக்குழந்தையுடன் 400 கி.மீ. நடந்தே சென்ற தம்பதிக்கு உதவிய மருத்துவர்- நெகிழ்ச்சி சம்பவம்

கோவை டூ வேலூர்... கைக்குழந்தையுடன் 400 கி.மீ. நடந்தே சென்ற தம்பதிக்கு உதவிய மருத்துவர்- நெகிழ்ச்சி சம்பவம்

கைக்குழந்தையுடன் ஓர் இடத்தில் இளைப்பாறி கொண்டிருந்த தம்பதியை பார்த்த சிலர் வேலூர் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவரிடம் தகவல் தெரிவித்தனர்.

  • Share this:
கோவையில் இருந்து வேலூர் நோக்கி கைக்குழந்தையுடன் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த தம்பதிக்கு அரசு மருத்துவர் உதவி செய்து சென்னைக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நவீன் என்பவர் தனது மனைவி ரம்யா மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசித்து வந்துள்ளார்.  பொதுமுடக்கத்தால் உணவுக்கு வழியின்றி தவித்து வந்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் செங்கல் தயாரிக்கும் வேலைக்கு செல்ல முடிவு செய்த நவீன், பேருந்து போக்குவரத்து இல்லாத காரணத்தால் அவர், தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் கோவையில் இருந்து புறப்பட்டு கடந்த 5 நாட்களாக நடைப்பயணம் மேற்கொண்டு வேலூர் வந்தடைந்தனர். வரும் வழியிலேயே ஆங்காங்கே இளைப்பாறி பயணத்தை தொடர்ந்து வந்தனர். வேலூர் வழியாக இவர்கள் நடந்து செல்லும்போது கைக்குழந்தையுடன் ஓர் இடத்தில் இளைப்பாறி கொண்டிருந்தததை மக்கள் பார்த்து அந்த தகவலை வேலூர் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் ரவிசங்கரிடம் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த அந்த மருத்துவர், உதவும் நோக்கில் அவர்களிடம் விசாரித்துள்ளார். பின்னர், அவர்களின் நிலை குறித்து அறிந்த மருத்துவர், தனது காரில் சொந்த செலவில் அந்த தம்பதியை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து நவீன் கூறுகையில், ’நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் வேலை இல்லை, வீட்டிற்கு 2 மாத வாடகை கட்ட முடியவில்லை. குழந்தையுடன் இருக்கும் எங்களுக்கு உணவுக்கும் வழியில்லை. எனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் கடன் வாங்கி மருத்துவம் பார்த்தோம். இப்போது அந்த கடனை அடைக்க எங்களிடம் பணமில்லை. இந்த சுழலில் சென்னையில் வேலையுடன் தங்க இடம் கொடுப்பதாக சொன்னார்கள். அதனால்தான் எனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னைக்கு நடந்தே செல்ல துணிந்தோம். செல்லும் வழியில் உதவும் எண்ணம் கொண்டோர் எங்களுக்கு உணவு கொடுப்பார்கள் அதை வாங்கி வேலூர் வரை வந்தடைந்தோம்’ என்றார். ஊரடங்கு காலத்தில் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சூழலில் உதவும் நோக்கில் முன்வந்து சிலர் செய்யும் உதவிகள் என்றும் நெகிழ வைப்பவையே…

செய்தியாளர்- செல்வம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: