வேலூரில் டிப்டாப் உடையில் வந்த பட்டதாரிகள், மாடுகளை லாவகமாக கையாண்ட காட்சிகள் காண்போரை ரசிக்க வைத்துள்ளன.
வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல், வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மொத்தமுள்ள 22 பணியிடங்களுக்கு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றாலும் இதற்கு விண்ணப்பித்திருந்த பெரும்பாலானோர் பட்டதாரிகள் ஆவர்.
சான்றிதழ் சரிபார்ப்பு, சைக்கிள் ஓட்டுதல், மாடுகளை கையாளுதல் போன்ற பல சோதனைகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெற்றது. ஓட்டுநர் சான்றிதழ் பெறுவதற்காக வரும் வாகன ஓட்டிகள் 8 போடுவது போல சைக்கிள் ஓட்டிக் காட்டி, கிராமத்து திருவிழாக்களில் இடம் பெறும் ஸ்லோ ரேஸை நியாபகப்படுத்தினர்.
நேர்முகத் தேர்வுக்காக டக்இன் செய்து உடையணிந்து டிப் டாப்-பாக வந்த பட்டதாரிகள், மாடுகளைக் கையாண்ட காட்சிகளை பலரும் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.
மரத்தில் கட்டப்பட்ட மாட்டை அவிழ்த்து ஒரு cow walk செய்து விட்டு மீண்டும் மரத்திலேயே கட்டிப் போட்டு விட்டு வரும் சோதனையில் பலர் மாடர்ன் அண்ணாமலை ரஜினியா மாறிப் போயினர். ஏழு ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் நேர்காணல் என்பதால் ஏற்கனவே வேறு வேலைகளில் இருப்போரும் அரசு வேலைக்காக திரண்டு வந்திருந்தனர்.
அரசு வேலை என்பதனால் மட்டுமின்றி உண்மையிலேயே கால்நடைகள் வளர்ப்பு மீதான அக்கறையால் ஏராளமான இளைய தலைமுறையினர் இத்தகைய பணிகளில் பங்கேற்றால் அது வரவேற்கத்தக்கதே என்கின்றனர் கால்நடை நல ஆர்வலர்கள்.
-செய்தியாளர்: செல்வம்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.