வேலூர் கோட்டை யார்வசம்? இன்று வாக்கு எண்ணிக்கை

கதிர் ஆனந்த் | தீப லக்‌ஷ்மி | ஏ.சி சண்முகம்

Vellore Election Results | வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், விவிபேட்டில் பதிவான வாக்குகளுக்கும் வேறுபாடு இருந்தால், விவிபேட்டில் பதிவான வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

  • Last Updated :
  • Share this:
வேலூர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. காலை 11 மணிக்கே முன்னணி நிலவரம் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணப்பட்டுவாடா புகாரை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல், கடந்த 5ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 71.51 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த வாக்குகள் இன்று  எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை மையமான ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் 76 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதோடு, கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட 2 கட்டடங்களில் இடிதாங்கி பொருத்தப்பட்டுள்ளது

இன்றைய தினம் 1073 காவலர்களும், துணை ராணுவ படையினர் 100 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

முன்னணி நிலவரம் காலை 11 மணிக்கே தெரிந்துவிடும். மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, விவிபேட்டில் எந்த சின்னத்துக்கு எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என கணக்கிடப்படும்.

அதில், வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், விவிபேட்டில் பதிவான வாக்குகளுக்கும் வேறுபாடு இருந்தால், விவிபேட்டில் பதிவான வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும் களமிறங்கியுள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிட்டுள்ளார். காலை 11 மணிக்கே வேலூர் கோட்டை யார்வசம் என்பது தெரிந்துவிடும்.
Published by:Yuvaraj V
First published: