வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டையைச் சேர்ந்தவர் 23 வயதான யோகராஜ்; அதே ஊரைச் சேர்ந்தவர் 23 வயதான தீபக். இருவரும் ராணுவத்தில் பணியாற்றி வந்தனர். இருவரும் சீன எல்லையில் உள்ள லடாக்கில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்தனர். யோகராஜ் சொந்தமாக ஜாப்ராபேட்டையில் வீடு கட்டி வந்தார். அதற்காக அவரும் தீபக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தனர். சனிக்கிழமை யோகராஜின் பிறந்தநாள் என்பதால் அவரிடம் தீபக் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர் நேதாஜி ஆகியோர் மதுவிருந்து கேட்டுள்ளனர். அதனால் வெள்ளிக்கிழமை இரவு காட்பாடி கழிஞ்சூர் ரயில்வே கேட் அருகே யோகராஜுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரவு 10 மணி வரையிலும் மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் மது தீர்ந்துவிட்டதால், மது வாங்குவதற்காக கழிஞ்சூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். மது போதையில் இருந்த யோகராஜ் தரப்பினருக்கும் அந்த கும்பலுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.
Also read: ’வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெரும் பணக்காரர்களின் தூண்டுதலால் போராட்டம் நடக்கிறது’ - எச்.ராஜா
ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் யோகராஜ், தீபக், நேதாஜி ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டது. இதில் யோகராஜின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து விழுந்தது; 3 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யோகராஜ் இறந்தார்.
தீபக், நேதாஜி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் யோகராஜைக் கொலை செய்த கும்பல் செயின்பறிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
கொலை செய்து விட்டுத் தப்பியோடிய கும்பலை விருதம்பட்டு போலீசார் தேடி வருகின்றனர். நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய ராணுவவீரர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்