சாலை விபத்துகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது ஓட்டுநரின் சில நொடி கண் அயர்வுதான். அவர்களை கண்காணிக்க ஆள் இல்லாத நேரத்தில், நவீன கேமரா ஒன்று அந்த வேலையைச் செய்கிறது. இதன்மூலம் விபத்துகள் தவிர்க்கப்படும் என்கிறார்கள் ஓட்டுநர்கள்.
வாழ்க்கைப்பயணத்தில் வாகன பயணம் என்பது தவிர்க்க முடியாதது. ஒரு நாளும் ஒரு பொழுதும் சாலைகளுக்கு ஓய்வு கொடுக்க வாகனங்கள் அனுமதிப்பதில்லை. அதேபோல், சாலை விபத்துகளும் அன்றாட நிகழ்வாகி விட்டன.
பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது ஓட்டுநரின் தூக்கக் கலக்கம்தான். ஓட்டுநர்களின் சில நொடி தூக்கம், பல குடும்பங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுகின்றன. இதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் தூக்கத்தை கலைத்து அலாரம் எழுப்பும் கேமரா.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சந்தைக்கு வந்துவிட்ட இந்த கேமராவை, அனைத்து தனியார் பேருந்துகளிலும் பொருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், இன்று வரை அது சாத்தியமாகவில்லை. அரசும் இதில் பெரிய அக்கறை காட்டாத நிலையில், சென்னையில் இயங்கும் ஒரு சில ஆம்னி பேருந்துகளில் மட்டும் இவை தற்போது பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமரா ஓட்டுநர்களின் கண்களை பார்த்துக்கொண்டே இருக்கும். அவரது இமைகள் சில வினாடிகள் மூடியே இருந்தால், உடனே சத்தம் எழுப்பி தூங்காதே நேராக பார்த்து ஓட்டவும் என்று சொல்கிறது. தூங்குவது மட்டுமல்ல பக்கவாட்டில் சாய்ந்தால் கூட அலர்ட் செய்கிறது இந்த கேமரா.
இதை தனியார் பேருந்துகள் மட்டுமின்றி, அரசு பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பொருத்தினால் ஏராளமான விபத்துகளை தடுக்க முடியும் என்கிறார்கள் ஓட்டுநர்கள்...
பல லட்சம் செலவு செய்து வாகனம் வாங்கும் நாம், பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த உயிர்காக்கும் கேமராவை வாங்க தயக்கம் காட்டுவது தான் சிக்கலை உருவாக்குகிறது. இது குறித்த விழிப்புணர்வு அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டுநர்களின் விருப்பமாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.