• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "ஏழை எளியோருக்கு ஓடியாடி உதவியவருக்கா இந்தக் கொடுமை? பெருந்துயர் அளிக்கிறது" - தொல்.திருமாவளவன் இரங்கல்..

"ஏழை எளியோருக்கு ஓடியாடி உதவியவருக்கா இந்தக் கொடுமை? பெருந்துயர் அளிக்கிறது" - தொல்.திருமாவளவன் இரங்கல்..

திருமாவளவன் MP

திருமாவளவன் MP

கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மறைந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

    இரங்கல் செய்தியில், ”அவரது மறைவு காங்கிரசு கட்சிக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கே பேரிழப்பாகும். 1984இல் முதன்முதலாக எனக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது கல்லூரி மாணவனாக இருந்த நான், ஈழ விடுதலை ஆதரவு மாணவர் மாநாடு ஒன்றை பெரியார் திடலில் எனது தலைமையில் ஒருங்கிணைத்திருந்தேன். அதற்காக மாணவர்கள் தமிழ் உணர்வாளர்களையெல்லாம் சந்தித்து ஆதரவு திரட்டினோம்.

    அப்போது, தி.நகரில் வசந்த் & கோ கடைக்குச் சென்று அண்ணன் வசந்தகுமார் அவர்களையும் சந்தித்து மாநாட்டுத் துண்டறிக்கையைக் கொடுத்தோம். அதனை வாங்கிப் பார்த்த அண்ணன் வசந்த்குமார் அவர்கள், மிகுந்த மகிழ்ச்சியடைந்து என் தோள்களைத் தட்டிக்கொடுத்தார். ’உங்களைப்போன்ற இளைஞர்கள் தமிழ்நாட்டுக்குத் தேவை’ என்று கூறியதோடு, கொஞ்சம் நிதியுதவியும் செய்து எங்களை ஊக்கப்படுத்தினார்.



    அதன் பின்னர் இரு பத்தாண்டுகளுக்குப் பின்னர் அரசியல் நிகழ்வுகளில் அவரை மீண்டும் சந்திக்கும்போது, எனது முதல் சந்திப்பை அவரோடு பகிர்ந்துகொண்டேன். அதே மகிழ்ச்சியுடன் என்னைத் தட்டிக்கொடுத்தார். ’நீங்கள் இன்னும் உயரவேண்டும்’ என்று வாழ்த்தினார்.

    பின்னர், ஒரே கூட்டணியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களானோம். அவர் நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்திலும் பங்கேற்றவர். எப்போதும் சுறுசுறுப்புடன் செயலாற்றக் கூடியவர்.

    அதீதமான தன்னம்பிக்கை உள்ளவர். விடாமுயற்சியுடன் கடினமாக உழைக்கக் கூடியவர். வெற்றிகளைக் குவிப்பதில் மட்டுமே குறியாக இருப்பவர். தொழிலில் மட்டுமின்றி அரசியலிலும் சாதனைகள் படைத்தவர்.

    அவர், இளைய தலைமுறையினருக்கு உந்துதல் அளிக்கும் வகையில் 'வெற்றிப்படிக்கட்டுகள்’ என்னும் நூலை எழுதியவர். கம்பீரம் அவரது சிறப்புகளுள் ஒன்று. இந்தப் பாழும் கொரோனாவுக்கு இவரும் பலியாகிவிட்டாரே என்பது கொடுந்துயராகவுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் காங்கிரசு பேரியக்கத்தினருக்கும் விசிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”  என அவர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: