முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை கருத்திற்கு அரசியல் தலைவர்கள் பதில்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் சர்ச்சை கருத்திற்கு அரசியல் தலைவர்கள் பதில்

அரசியல் தலைவர்களின் கருத்து

அரசியல் தலைவர்களின் கருத்து

தமிழ்நாடு என்ற பெயரின் சர்ச்சை கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு என்பதற்குப் பதிலாக தமிழகம் என்று கூறுவதே சரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்றும் இதனால் பாரதத்தின் ஒரு பகுதியை தமிழகம் என்பதுதான் சரி என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. ஆளுநரின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநரை இயக்குவது சங் பரிவார் என்றும் அவர்களின் ஊது குழலாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் கொள்கைக்காக கோரிக்கைக்காக சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த நிலையில் அவரது கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு என்று 3 முறை கூறி சூட்டப்பட்ட பெயரை, ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர்வாதத்தை காட்டியுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு குறித்து பேசியுள்ள கருத்தை திரும்ப பெற வேண்டும். தவறாக பேசி விட்டேன் என்று அவர் கூற வேண்டும். ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஆளுநரை இயக்குவது சங் பரிவார், ஊது குழலாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என தெரிவித்தார்.

இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, வரலாறு தெரியாமல் பேசுவதை ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். தமிழ்நாடு என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கூறப்படுவதாகவும் விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு தனித்த பண்பாடு, கலாச்சாரத்தைக் கொண்டது எனவும், அண்ணா வைத்த தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமானது என்றும் கூறினார்.

தமிழ்நாடு வாழ்க என தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ட்வீட் செய்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஆர்.என்.ரவி என்பதைவிட, ஆர்.எஸ்.எஸ்.ரவி என்பதே சரியாக இருக்கும் என்றும் சனநாயகத்துக்கான ஆளுநர் என்பதைவிட, சனாதனத்துக்கான ஆளிவர் என்பதே சரியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் பதவியில் அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமாகவும், ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவும் ஆர்.என். ரவி செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கேள்விக்கு திருச்சியில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழ்நாட்டை தனிநாடு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற அர்த்தத்தில் ஆர்.என்.ரவி கூறியுள்ளதாக விளக்கம் அளித்தார்.

First published:

Tags: DMK, Jayakumar, RN Ravi, Tamil Nadu, Vaiko