தமிழ்நாட்டின் மாநில வன விலங்கான வரையாட்டின் கொம்பை பிடித்து துன்புறுத்திய இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் மற்றும் வால்பாறை பகுதிகளை சுற்றி பார்க்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலை சுமார் 40 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை, புலி, மான் மற்றும் நமது மாநில விலங்கான வரையாடு இங்கு உள்ளது. அரிய வகை வனவிலங்குகள் பட்டியலில் இருக்கும் வரையாட்டினை கூடுதல் கவனத்துடன் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். வன விலங்குகள் அவ்வப்போது காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் சுற்றித் திரிவது வழக்கம்
இந்நிலையில் வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் வனவிலங்குகளை அதிக அளவில் துன்புறுத்துவதாக தகவல்கள் பரவின.குறிப்பாக மிகவும் சாதுவான வரையாட்டின் கொம்புகளை பிடித்து புகைப்படம் எடுப்பதை பலர் வாடிக்கையாக வைத்திருந்தனர். இதையறிந்த ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், வன விலங்குகளை அச்சுறுத்தி புகைப்படங்கள் எடுத்தால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்தார்.
இந்நிலையில் பொள்ளாச்சி வனச்சரதிற்குட்பட்ட வால்பாறை சாலையில் நின்று கொண்டிருந்த தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டின் கொம்புகளை பிடித்து 2 பேர் கொடுமைப்படுத்தினர். மேலும் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். இளைஞர்களின் செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில் அந்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த செல்டன், ஜோபி ஆபிரகாம் என்பது தெரியவந்தது. இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் வனவிலங்குகளை இதுபோன்று துன்புறுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu