Home /News /tamil-nadu /

வன்னியர் இடஒதுக்கீடு.. ஜல்லிக்கட்டு போல் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்: வ. கௌதமன்

வன்னியர் இடஒதுக்கீடு.. ஜல்லிக்கட்டு போல் தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்: வ. கௌதமன்

வ. கௌதமன்

வ. கௌதமன்

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காலத்தின் கட்டாயம். ஆகையினால் தமிழ்நாடு அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசை வ.கௌதமன் கேட்டுகொண்டுள்ளார்.

    ஜல்லிக்கட்டு உரிமைக்கு சட்டம் இயற்றியது போன்று வன்னியர்களின் 10.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாடு அரசு புதிய சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இல்லையேல் வன்னியர்கள் ஒரு அறமான யுத்தத்திற்கு தயாராக வேண்டும்.என்று இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளருமான வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வ.கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வன்னியர்களுக்கென 20% தனி உள் இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கேட்டு 1980ஆம் ஆண்டில் போராடத் தொடங்கி 1987ஆம் ஆண்டில் அப்போராட்டம் உக்கிரமாகி அப்போது ஆண்ட அதிமுக அரசால் இருபத்தியொரு வன்னிய இளைஞர்களை பதைக்கப் பதைக்க சுட்டுக்கொன்று அதன் தொடர்ச்சியாக 108 சாதிகளுக்கும் சேர்த்து முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி  20% பொது இட ஒதுக்கீட்டினை கொடுத்து பின்பு நாங்கள் கேட்டது எங்களுக்கென 20% தனி உள் இடஒதுக்கீடு என்று சொல்லி மீண்டும் மீண்டும் போராடி ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு பின்பு 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்பொழுது ஆண்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர்களுக்கென 10.5% தனி உள் இட ஒதுக்கீடு பிரகடனப்படுத்தியது.

    அதனை ஆளுநரிடமும் அனுப்பி ஒப்புதல் பெற்று அதன் பின்பு அரசிதழிலும் வெளியிட்டு நடைமுறைக்கு வந்த நிலையில்  அதுவும் இல்லை என உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கிறது. வன்னியர்களின் வலி உணர்ந்து தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மிகச் சரியான புள்ளி விபரங்களோடு மீண்டும் ஒரு வலுவான சிறப்புச் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஒரு வேளை தமிழ்நாடு அரசாலும் மறுக்கப்பட்டால் 1987ஆம் ஆண்டில் எழுந்த போராட்டத்தை விடவும் பல நூறு மடங்கு ஒன்று கூடி வன்னியர்கள் உறுதியான அதே நேரத்தில் ஒரு அறமான யுத்தத்திற்கும் தயாராக வேண்டுமென உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

    முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் மு.கருணாநிதி, செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரால் அமைக்கப்பட்ட மூன்று நீதியரசர்களின் தலைமையிலான ஆணையங்கள் கொடுத்த வரைவின் படியும் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டு வரையறையின் படியும்தான் வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பு தனி ஒரு சாதிக்கு இட ஒதுக்கீடு கூடாதென ஏழு விதிமுறைகளை கூறி தடை விதித்தது.

     

    இதையும் படிங்க: எஸ்சி/எஸ்டி பிரிவினரை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்... பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும்: திருமாவளவன்


    ஏற்கனவே, தமிழ்நாட்டை ஆண்ட கலைஞர் மு.கருணாநிதியால் அருந்ததியர் என்கிற ஒரு சாதிக்கு உள் இட ஒதிக்கீடு கொடுக்கப்பட்டு நடைமுறையிலிருந்து வருகிறது. அப்படியிருக்க வன்னியர்களுக்கு மட்டும் கொடுக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியது ஒரு அறமற்ற நிலைப்பாடு. இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டினை நாங்கள் வரவேற்கிறோம். அது நிரந்தரமாக தொடர வேண்டும். ஆனால், வன்னியர்களுக்கு கொடுத்ததை மட்டும் திரும்பி பறிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டி நின்றவர்களை ஒரு சில உயர் மட்ட திமுகவினர் மறைமுகமாக ஆதரித்தது எத்தகைய நேர்மை?

    எடப்பாடி அரசு அவசர கோலத்தில் சட்டம் இயற்றியிருக்கிறார்கள், வன்னியர்களே எனக்கு வாக்களியுங்கள் முதலமைச்சர் ஆனதும் நான்தான் உங்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த போகிறேன் என சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதை இந்நேரத்தில் மனதில் கொள்ள வேண்டும். வன்னியர்களிடம் ஓட்டுகளை மட்டும் முதல்வர்  நேரிடையாக கேட்டுவிட்டு அறிக்கையை மட்டும் அமைச்சர்  துரைமுருகன் மூலமாக வெளியிடுவது எந்த வகையில் ஞாயமானது?

    மேலும் படிக்க: கிருஷ்ணகிரியில் தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி ரூ.10 கோடிக்கு விற்பனையான ஆடுகள்


    தமிழர் குடியில் பிறந்த அனைவரும் ஒரு தாய் மக்கள். வன்னியர்களுக்கு கிடைக்கவேண்டிய இட ஒதுக்கீட்டினை போன்று நாங்கள் பெரிதும் மதிக்கின்ற எங்களின் தேவர் குடி உள்ளிட்ட சீர்மரபினருக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைத்தே ஆகவேண்டும். அதற்காகவும் நாம் அனைவரும் ஒன்று கூடி போராட வேண்டும். ஆனால், இன்று இந்த இரண்டு பெருங்குடிகளுக்குள்ளும் ஒரு பகை உணர்ச்சி திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஒரு போதும் சூழ்ச்சியாளர்களின் இலக்கு வெற்றி பெறாது. வெற்றிப்பெற விடவும் கூடாது.

    இந்திய ஒன்றியம் முழுக்க மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள உயர்சாதியினருக்கு 10% தனி இட ஒதுக்கீடு கொடுத்தபோது இந்த மண்ணின் பூர்வகுடிகள் எவரும் வாய் திறக்கவில்லை என்பது வெட்கத்திலும் வெட்கக்கேடு. ஆனால், சக தமிழர் குடி ஒன்று இருபத்தோரு உயிர்களை பதைக்க பதைக்க பலி கொடுத்துவிட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி பெற்ற உரிமை பறிபோயிருப்பதை இனியாவது அனைவரும் தாயுள்ளத்தோடு பார்க்க வேண்டும். இந்நேரத்தில் தன் வாழ்வின் பெரும்பாதி காலத்தை வன்னியர்களின் இட ஒதுக்கீட்டு உரிமைக்காக மட்டுமே செலவழித்து வாழ்ந்த மருத்துவர் இராமதாசின் தியாகத்தை இன்றைய இளைய தலைமுறையினரும் நினைவில் நிறுத்த வேண்டும்.

    சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காலத்தின் கட்டாயம். ஆகையினால் தமிழ்நாடு அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இன்றுள்ள அறிவியல் சூழலில் ஆதார் எண்ணிலோ ரேஷன் அட்டையிலே சாதிகளை இணைக்கச் சொன்னால் ஏழு அல்லது பத்து நாட்களுக்குள்  கணக்கெடுத்து விடலாம். இதனை தமிழ்நாடு அரசு ஏன் உடனடியாக செய்யக் கூடாது?

    மேலும் படிக்க: பெண் கவுன்சிலர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த சென்னை மேயர் பிரியா


    எதுவாக இருந்தாலும் வன்னியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட 10.5 % தனி உள் இட ஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு இயற்றியது போன்று ஒரு சிறப்பு சட்டமியற்றி உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டும். ஒருவேளை வன்னியர்களின் பெருவலியினை உள்வாங்காமல் மீண்டும் இச் சமூகத்திற்கு நிரந்தர இட ஒதுக்கீட்டு இழப்பு ஏற்படுமானால் 1987ஆம் ஆண்டில் நடந்த வன்னியர் இட ஒதுக்கீடு உரிமை போராட்டத்தை போன்று பல நூறு மடங்கு வலிமையான ஒரு அறமான யுத்தத்தை  எனது தலைமையில் நேரில் நின்று நடத்த வேண்டி வரும் ’ என்று அவர் கூறியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Vanniyar Reservation

    அடுத்த செய்தி