• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக அரசு போதுமான விளக்கம் அளிக்கவில்லை- வன்னியர் இடஒதுக்கீடு குறித்து சீமான் விமர்சனம்

தமிழக அரசு போதுமான விளக்கம் அளிக்கவில்லை- வன்னியர் இடஒதுக்கீடு குறித்து சீமான் விமர்சனம்

சீமான்

சீமான்

தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் போதுமான விளக்கம் அளிக்காததன் காரணமாகவே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடை ரத்து செய்ய காரணமாக அமைந்துள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாட்டில் மிகவுப் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. தேர்தலை கருத்தில் கொண்டே இச்சட்டம் இயற்றப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

    வன்னியருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், வன்னியர் பிரிவில் 7 சாதிகள் உள்ளதாகவும், இச்சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் பாமக தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து இந்தச் சட்டத்தை ரத்து செய்துள்ளது.

    இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வன்னிய சமூக மக்களுக்காக அறிவிக்கப்பட்ட 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு செல்லாது எனும் உயர்நீதிமன்றத்தீர்ப்பு அதிர்ச்சியும், ஏமாற்றமுமளிக்கிறது. தமிழக அரசு, நீதிமன்றத்தில் போதுமான விளக்கங்கள் அளித்து வாதிடாததே இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

    ஆகவே, உடனடியாகச் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்கவும், 10.5% உள்ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: