• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு - உயர்நீதிமன்றம் எழுப்பிய வினாவுக்கு ராமதாஸ் பதில்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு - உயர்நீதிமன்றம் எழுப்பிய வினாவுக்கு ராமதாஸ் பதில்

ராமதாஸ்

ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்பது நிறுவுவதற்காக 7 வினாக்களை சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

  • Share this:
    வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வி தொடர்பாக டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ''சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?'' எனக் கேள்வியெழுப்பினர். ''சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது'' எனத் தெரிவித்தனர்.

    இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. மனு நீதி சோழனின் சிலை அமைந்துள்ள அந்த வளாகத்தில் நீதி வழுவிய தருணங்களும் பல உண்டு. அத்தகைய தருணங்களின் பட்டியலில் வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு எழுதப்பட்ட  தருணமும் இப்போது புதிதாக சேர்ந்திருக்கிறது.

    வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்பது நிறுவுவதற்காக 7 வினாக்களை சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. அவற்றுக்கு தமிழக அரசுத் தரப்பில் போதிய  விளக்கம் அளிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த வினாக்களுக்குள்ளாகவே ஆயிரம் முரண்பாடுகள் உள்ளன. வினாக்கள் விடை தேடுவதற்காக எழுப்பப்பட்டதாக தெரியவில்லை. மாறாக, விடையை நியாயப்படுத்துவதற்காக வினாக்கள் தயாரிக்கப்பட்டதாகத் தான் தோன்றுகிறது.

    7 வினாக்களும் உள்ளத்தில் இருந்து நான் அளிக்கும் பதில்களும்

    சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பிய 7 வினாக்களைப் பார்ப்போம்.

    முதல் வினா: 2018-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தில் 102-ஆவது திருத்தமும், 2021-ஆம் ஆண்டில் 105-ஆவது திருத்தமும் செய்யப்பட்டதற்கு இடைப்பட்ட காலத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உண்டா?

    சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள முதல் வினாவுக்கான விடை மிகவும் எளிதானது. 102-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அதிகாரம் அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திருத்தம் ஆகும். அதே நேரத்தில், இந்த திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் மே 5-ஆம் தேதி அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து   பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி,  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்கும் வகையில்  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 105-ஆவது திருத்தம் செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்  உண்டு என்பது தான் அந்தத் திருத்தத்தின் நோக்கம் ஆகும்.

    102-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி 340 ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டிருந்தது.  அப்பிரிவு மத்திய ஓபிசி இட ஒதுக்கீட்டுப் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது தொடர்பானது தானே தவிர, இச்சட்டத் திருத்தத்தால் மாநில அரசுகளில் அரசுகளின் அதிகாரம் எந்த வகையிலும் பறிக்கப்படவில்லை என்பதை விளக்குவது தாம் 105-ஆவது திருத்தத்தின் நோக்கம் ஆகும். அவ்வாறு இருக்கும் போது இந்த இரு சட்டத் திருத்தங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை இயற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை.அதுமட்டுமல்ல. வன்னியர் தனி இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாள். அப்போது 102-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை  என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. அதனால், 102-ஆவது திருத்தம் வன்னியர் இட ஒதுக்கீட்டை எந்த வகையிலும் பாதிக்காது.

     

    இரண்டாவது வினா: ஓர் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அந்தச் சட்டத்தை திருத்த முடியுமா?

    தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான சட்டம் 1993-94 ஆவது ஆண்டில் இயற்றப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அதன்பின்னர் 2008-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் பிற்படுத்தப் பட்ட வகுப்பில் தலா 3.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் கிறித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு திரும்பப்பெறப்பட்டது. ஆனால், இந்த இரு நிகழ்வுகளிலும்  ஒன்பதாவது அட்டவணையில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை. குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலும் பெறப்படவில்லை.

    2009-ஆம் ஆண்டில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்போதும் ஒன்பதாவது அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.அவ்வாறு இருக்கும் போது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் மட்டும் இத்தகைய வினாக்கள் எழுப்பப்படுவது ஏன்?

    மூன்றாவது வினா : அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை, குறிப்பாக 338-பி பிரிவை புறக்கணித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? 

    அரசியலமைப்புச் சட்டத்தை புறக்கணித்து விட்டு எந்தப் பிரிவுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியாது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338-பி பிரிவு என்பது 102-ஆவது  திருத்தம் மூலம் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டதாகும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் வழங்குவது தான் இந்தப் பிரிவின் நோக்கம் ஆகும். மாநில அளவில் ஓபிசிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கும், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் அதிகாரம் உள்ளது.  அதனால் வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவும்  தடை இல்லை.

    நான்காவது வினா : சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? 

    இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்குவதன் நோக்கமே சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவது தான். சமூக ஏற்றத்தாழ்வுகள் சாதியின் அடிப்படையில் தான் ஏற்படுகின்றன என்பதால், அதைப் போக்குவதற்கான இட ஒதுக்கீடும் சாதி அடிப்படையில் தான் வழங்கப்பட வேண்டும். இதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் அவர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார். காகா கலேல்கர் தலைமையிலான இந்தியாவின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மண்டல் தலைமையிலான மண்டல் ஆணையம் ஆகியவையும் சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.

    தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளத்தில் ஈழவர்கள் எனப்படும் தனித்த சாதிக்கு 14% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நாடார்கள், விஸ்வகர்மாக்கள், தீவராக்கள் என தனிப்பட்ட சாதிகளுக்கு தனித்தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சாதி அடிப்படையிலோ, தனிப்பட்ட ஒரு சாதிக்கோ இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை.

    ஐந்தாவது வினா: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை  ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? 

    வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரிப்பது ஆகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமூகத்தினரின் சமூக நிலையை இறக்கியோ, ஏற்றியோ இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரையும் அதே நிலையில், அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற நிலையில் வைத்து தான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதனால், அவர்களின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை ஆகியவை தேவையில்லை. மூன்று பிரிவினருக்கும் அவர்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அவர்களின் மக்கள்தொகை குறித்த புள்ளி விவரம் மட்டும் போதுமானது.

    தமிழ்நாட்டில் 1983-ஆம் ஆண்டில் அம்பாசங்கர் ஆணையம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள்தொகையை  வீடுவீடாக சென்று சேகரித்தது. அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற பிரிவு 1989-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அதில் இடம்பெற்றிருந்த 108 சாதிகளின் மக்கள்தொகை, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 24.64% ஆகும். அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த அடிப்படையில் 13.01 மக்கள்தொகை கொண்ட வன்னியர்களுக்கு 10.50%,  எம்.பி.சி மற்றும் சீர்மரபினர் மக்கள்தொகை 8.56% என்பதால் அவர்களுக்கு 7%, பிற எம்.பி.சி வகுப்பினரின் மக்கள்தொகை 3.05% என்பதால் அவர்களுக்கு 2.5% இட ஒதுக்கீடு என பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுக்கான கணக்கீட்டை இதை விட துல்லியமாக செய்ய இயலாது. அந்த வகையில் தேவையான புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் வன்னியர்களுக்கும், பிற சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

    ஆறாவது வினா: வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை மீறியதா? என்பது தான் ஆறாவது வினா ஆகும்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகள் சம வாய்ப்பை வலியுறுத்தும் பிரிவுகள் ஆகும். ஒரே நிலையிலான வகுப்பினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது என்பதால் இந்திய அரசியல் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் எந்த வகையிலும் மீறவில்லை.

    ஏழாவது வினா: எந்தவிதமான நோக்கக் காரணங்களும் இல்லாமல் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின்  அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா?

    உயர்நீதிமன்றத்தின் இந்த வினா ஏற்கனவே எழுப்பப்பட்ட ஐந்தாவது வினாவிற்கு எதிரானது ஆகும். அந்த வினாவில் மக்கள்தொகை உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று வினா எழுப்பிய உயர்நீதிமன்றம், இப்போது அந்த புள்ளி விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று வினவுவது எவ்வளவு முரண்பாடு?

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமூகத்தினரின் சமூக நிலையை இறக்கியோ, ஏற்றியோ இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரையும் அதே நிலையில், அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற நிலையில் வைத்து தான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதனால், இதற்கு எந்த நோக்கக் காரணங்களும் தேவையில்லை.

    பரிசீலிக்கப்படாத வாதங்கள்

    நீதி வழங்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு அழகு என்னவெனில் வழக்கு தொடுப்பவர்களுக்கும்,  வழக்கு நடத்துபவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குவது தான். ஆனால், இந்த வழக்கின் விசாரணையில் சமவாய்ப்பு வழங்கப்படவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு எந்த வித நிபந்தனையுமின்றி தாராளமாக நேரம் ஒதுக்கப்பட்டது.  மொத்தம் 15 நாட்களுக்கும் மேலாக அவர்கள் வாதிட அனுமதிக்கப்பட்டது. ஆனால், இட ஒதுக்கீடுக்கு ஆதரவானவர்கள் தரப்பில் வாதிடுவதற்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை.” என அதில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: