வண்டலூர் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா

மாதிரிப் படம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா கிருமி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 சிங்கங்களுக்கு கடந்த 26-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது. பசியின்மை ஏற்பட்டதுடன், சில நேரங்களில் இருமல் பாதிப்பும் இருந்தது. இதையடுத்து, பூங்காவில் உள்ள மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

  அதனையடுத்து, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கங்களில் 11 சிங்கங்களின் உமிழ்நீர் மாதிரிகளை போபாலில் உள்ள NISHAD நிறுவனத்துக்கு கடந்த மாதம் 24 மற்றும் 29ம் தேதிகளில் பூங்கா நிர்வாகம் அனுப்பி வைத்தது. இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கடந்த 3ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் 9 வயது பெண் சிங்கம் நீலா உயிரிழந்தது.

  இந்நிலையில் அந்த சிங்கத்துக்கு டிஸ்டம்பர் வகை கிருமியும் இருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியாகியிருந்தது. இந்த சூழலில் 11 வயது சிங்கமான பத்மநாபன் கடந்த 16ம் தேதி கொரோனால் உயிரிழந்தது. போபாலில் உள்ள NISHAD மையத்தில் சிங்கங்களின் கொரோனா மரபணுக்கள் வரிசைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா பாதித்த 9 சிங்கங்களில் நான்கிற்கு இந்தியாவில் வேகமாக பரவும் டெல்டா வகை கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பகுப்பாய்வில் தெரியவந்தது. இதனை தேசிய உயர்பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

  இந்நிலையில் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் நாட்டில் சிங்கங்களை தவிர வேறு எந்த வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றார். மேலும் வண்டலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து, சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

  இதனிடையே, வனவிலங்குகளுக்கு கொரோனா பரவலை கண்காணிக்கும் வகையில், 6 பேர் கொண்ட மாநில அளவிலான பணிக்குழுவை நியமித்து வனத்துறை முதன்மை செயலர் சுப்ரியா சாஹூ உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரினக் காப்பாளர், காலநிலை மாற்றத்துக்கான சிறப்புச் செயலாளர், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சுந்தர் ராஜூ மற்றும் வனவிலங்கு பாதுகாவலர் தியோடர் பாஸ்கரன் இடம்பிடித்துள்ளனர். இந்த குழு தடுப்பூசி பணிகளை கண்காணித்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கும்.
  Published by:Karthick S
  First published: