இளம்வயதில் காஷ்மீருக்காக போராடி கைதானேன் - ஜம்மு காஷ்மீரில் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட வானதி ஸ்ரீனிவாசன்

வானதி ஸ்ரீனிவாசன்

இளம் வயதில் காஷ்மீருக்கா போராடி கைதானேன் என்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் உருக்கமாக பேசினார்.

  • Share this:
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ளார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தனது பயணங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

அதில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் பிறந்த நான், இப்போது ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இருக்கிறேன். 1997-ல் தனிப்பட்ட பயணமாக காஷ்மீர் வந்திருந்தேன். அரசியல் பணிகளுக்காக முதல் முறையாக ஜம்மு - காஷ்மீர் வந்திருக்கிறேன். ஜம்மு - காஷ்மீர் மாநில பா.ஜ.க மகளிரணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்மு வந்திறங்கியதும் நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. 1990-ம் ஆண்டு 'காஷ்மீர் காப்போம்' என்ற மிகப்பெரிய போராட்டத்தை நாட்டின் மிகப்பெரிய மாணவர் இயக்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) முன்னெடுத்தது.

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நான் ஏபிவிபி-யில் இணைந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த காலம் அது. காஷ்மீர் மாநில மாணவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்ய ஏபிவிபி ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி தமிழகம் வந்திருந்த காஷ்மீர் மாணவர்களுடன் சுற்றுப் பயணம் செய்த அனுபவம் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

காஷ்மீர் பாரதத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்பதற்காக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது அரசியல் சட்டப் பிரிவை நீக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் இளம் வயதில் நான் பங்கேற்றதையும், அதற்காக பாகிஸ்தான் கொடியை எரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானது. அதற்கடுத்த நாள் சட்டக் கல்லூரி அட்மிஷனுக்காக சென்னை சென்றது என்று எனது நினைவுகளை ஜம்மு கூட்டத்தில் பகிர்ந்து கொண்டேன். இந்த அனுபவம் காஷ்மீர் மக்களுடன் என்னை மிகவும் நெருங்கச் செய்தது.

எந்த லட்சியத்துக்காகப் போராடினோமோ, அந்த லட்சியம் வெற்றி அடைந்தபிறகு அந்த இடத்துக்குச் செல்வதைப் போன்ற மகிழ்வான, பெருமிதமான தருணம் இருக்கவே முடியாது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பாஜக மகளிரணி தேசியத் தலைவராக ஜம்மு சென்றது என் அரசியல் வாழ்வில் எப்போதும் நினைவில் நிற்கும் தருணம்.

நாம் அடிக்கடி செய்திகளில் கேட்ட புல்வாமா, பூன்ச், குப்வாரா போன்ற பகுதிகளில் இருந்து முஸ்லிம் பெண்கள் பா.ஜ.க மகளிரணி மாவட்டத் தலைவர்களாக ஜம்மு செயற்குழுவுக்கு வந்திருந்தனர். அவர்கள் என்னை கட்டியணைத்து காட்டிய அன்புக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. இன்று (10-7-2021) மதிய உணவு நேரத்தில் காஷ்மீர் இளைஞர்கள், இளம் பெண்களுடன் கலந்துரையாடும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஜம்மு - காஷ்மீரின் பெரும்பான்மையான மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பிரதமர் நரேந்திர மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்டு வரும் அமைதியை அவர்கள் ருசிக்க தொடங்கியிருக்கிறார்கள். நாட்டின் விடுதலைக்குப் பிறகு முதல் முறையாக கடந்த 2 ஆண்டுகளாக இங்கு குடிநீர், சாலைகள், பாலங்கள், கல்வி, சுகாதாரம் என்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவற்றையெல்லாம் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். காஷ்மீர் பெண்களிடம் உரையாடும்போது முத்தலாக் தடை சட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதை தெரிந்து கொள்ள முடிந்தது. பிரதமர் மோடியை அங்குள்ள முஸ்லிம் பெண்கள் தங்கள் உடன்பிறவா சகோதரராகவே பார்க்கின்றனர். இப்போது ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் அதாவது தொகுதி மறுவரையறை செய்வது போன்ற பணிகள் தொடங்கியுள்ளன.

விரைவில் அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு அமையப் போகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு - காஷ்மீரும் தேசிய நீரோட்டத்தில் கலக்கப் போகிறது.
ஜம்மு - காஷ்மீர் மக்கள் தங்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் தெரிவித்தனர். டெல்லி வந்ததும் அந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்களிடம் தெரிவித்து தீர்வு காண்பேன் என்று உறுதி அளித்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்கு பெண்களுக்கு இதுவரை இல்லாத உரிமைகள் கிடைத்துள்ளன. வேறு மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் சொத்துரிமை பெற முடியும் நிலை உருவாகியுள்ளது. இதுவெல்லாம் பாஜகவால்தான் சாத்தியமாகி இருக்கிறது என்பதை அவர்கள் சொல்ல கேட்டபோது பெரும் ஆனந்தம் அடைந்தேன். காஷ்மீரில் எனது பயணம் தொடர்கிறது. அந்த அனுபவங்களை அடுத்தடுத்து பகிர்ந்து கொள்கிறேன் என தனது முகநூல் பதிவில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Published by:Karthick S
First published: