Home /News /tamil-nadu /

இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்தில் முறையிடவில்லை - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்தில் முறையிடவில்லை - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

ADMK Double Leaf Symbol: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிடவில்லை என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

    இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிடவில்லை என்றும், மாறாக அந்த சின்னத்தை தங்கள் தரப்புக்கு வழங்கக் கோரியதாக  ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அடங்கிய நகல், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஓபிஎஸ் தரப்பு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. அதில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் மட்டுமின்றி கூடுதலாக 5 சிறப்பு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    அதில் கட்சியின் பொருளாராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 4 மாதங்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என்றும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர் .

    அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், சட்டவிதிகளை மீறி செயல்பட்ட ஈபிஎஸ்ஸை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கட்சி விதிகளை எடப்பாடி பழனிசாமி மதிக்கவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். மேலும் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. அதன்படி, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிடவில்லை என்றும், மாறாக இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு வழங்கக் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், அதிமுகவில் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை தொண்டர்களால் ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஒருங்கிணைப்பாளர்களின் பதவி 5 ஆண்டு கால பதவி , அதை பொதுக்குழுவால் நீக்க முடியாது. நேற்று நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தாது என்றும், எடப்பாடி பழனிசாமி தரப்பின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும் தற்பொழுதும் பன்னீர்செல்வம் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், பொருளாளராக இருக்கின்றார் என்றும் கூறி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார் ஓபிஎஸ்.

    Must Read : அதிமுக கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?... ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு 25ம் தேதி ஆஜராக வருவாய்துறை நோட்டீஸ்

    ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச் செயலாளர் பதவியே கிடையாது என்பதால் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தன்னை முதலமைச்சர் ஆகிய சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்ததை போன்று நான்கு ஆண்டு காலம் தனக்கு உறுதுணையாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்துள்ளார்.

    ஒருங்கிணைப்பாளர் கட்சி அலுவலகம் சென்ற போது எடப்பாடி ஆதரவாளர்கள் கல், அருவா கம்பு வீசினர். ரவுடிகளை 5 நாளாக அங்கு தங்க வைத்திருந்து அட்டூழியம் செய்தனர் எனவே எங்களை குறை சொல்ல அவர்களுக்கு தகுதியில்லை என்று வைத்திலிங்கம் கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, EPS, OPS

    அடுத்த செய்தி