ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; குற்றவாளியை கூண்டில் ஏற்றுக - வைகோ ஆவேசம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; குற்றவாளியை கூண்டில் ஏற்றுக - வைகோ ஆவேசம்

வைகோ

வைகோ

அமைதியாகச் சென்ற மக்கள் பேரணியை சீர்குலைப்பதற்காகவே, காவல்துறையால் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதையும் அன்றே நான் கூறினேன்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, குற்றவாளியை கூண்டில் ஏற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்  ஆலையை மூடக் கோரி நடந்த போராட்டத்தின் 100 ஆவது நாளான 2018,  மே 22 அன்று பொதுமக்கள் அணிதிரண்டு ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி வழியில் பேரணி நடத்தியபோது, திட்டமிட்டு வன்முறை ஏவப்பட்டது.

  அதன் காரணமாக தூண்டிவிடப்பட்ட கலவரத்தை அடக்குவதாக பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ரஞ்சித்குமார், கிளாஸ்டன், கந்தையா, தமிழரசன், சண்முகம், மாணவி ஸ்னோலின், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், கார்த்திக், ஜான்சி, செல்வசேகர், காளியப்பன், ஜெயராமன் ஆகிய 13 பேர் பலியானார்கள்.இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆணையம் வழங்கிய அறிக்கை, நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

  தூத்துக்குடியை ஜாலியன் வாலாபாக் ஆக மாற்றிய அன்றைய அதிமுக அரசின் அராஜகத்தைக் கண்டித்தும், துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி வேண்டும்; அறவழியில் போராடிய மக்கள் மீது அரச பயங்கரவாதத்தை ஏவிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் வெடித்தன. வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமி அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

  இதையும் படிங்க | ஒபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுகிறார் சபாநாயகர் - இபிஎஸ் ஆவேசம்!

  அமைதியாகச் சென்ற மக்கள் பேரணியை சீர்குலைப்பதற்காகவே, காவல்துறையால் திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதையும், காவல்துறையில் நன்கு பயிற்சி பெற்ற காவலர்களைத் தேர்வு செய்து, குறிபார்த்து சுட்டுக் கொன்றார்கள் என்பதையும், அங்கே நேரில் சென்றபோது பத்திரிகை ஊடகங்களில் நான் தெரிவித்தேன்.

  தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் அதே கருத்தைத் தனது விசாரணை அறிக்கையில் கூறி இருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது, பெரியார் மொழியில் கூறினால் சமுக்காளத்தில் வடிகட்டியப் பொய் என்பதை விசாரணை ஆணையத்தின் அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

  இதனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறைஅலுவலர்கள் மீது விசாரணை ஆணையம் பரிந்துரைத்தவாறு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Mdmk leader vaiko, Thoothukudi Sterlite, Vaiko, Vaiko statement