• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • வைகோ மகனுக்கு மதிமுகவில் பொறுப்பு: திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவா இப்படி?

வைகோ மகனுக்கு மதிமுகவில் பொறுப்பு: திமுகவில் வாரிசு அரசியலை எதிர்த்த வைகோவா இப்படி?

வைகோ

வைகோ

கருணாநிதி வாரிசு அரசியல் செய்கிறார் என்று விமர்சனத்தை முன்வைத்து புதிய கட்சியைத் தொடங்கிய வைகோவின் கட்சியில் அவரது மகனுக்கு திடீரென்று பொறுப்பு வழங்கப்பட்டது அரசியல் களத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை எழும்பூர் கட்சி அலுவலகத்தில நடைபெற்றது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வைகோவின் மகனானா துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

  ஆலோசனைக்குப் பிறகு துரை வையாபுரிக்கு பதவி வழங்குவது குறித்து ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், வைகோ உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் வாக்களித்தனர். அதில், 106 வாக்குகளில் 104 பேர் துரை வையாபுரிக்கு பதவி வழங்கவேண்டும் என்று வாக்களித்தனர். அதனையடுத்து, துரை வையாபுரிக்கு தலைமைக் கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, வைகோ வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தநேரத்தில் ம.தி.மு.க கட்சி தொடங்கப்பட்ட வரலாற்றையும் அப்போது நிலவிய அரசியல் சூழல்களையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்க வரலாறு என்று அக்கட்சியின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் கட்சி தொடங்கப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘1977 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது. அடுத்த 13 ஆண்டுகள், தொடர்ந்து மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில், கருணாநிதி தலைமையில், தோல்விமேல் தோல்விகளைச் சந்தித்தது தி.மு.கழகம்.  ஆட்சி பறிபோனதால், கொஞ்சம்கொஞ்சமாக, தி.மு.கழகத்தைத் தனது குடும்பச் சொத்தாக ஆக்கினார் கருணாநிதி. தமது மகனைக் கட்சியில் வாரிசாக முன்னிறுத்தினார். அப்போது, தி.மு.கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ, தனித்து நின்று, தமிழகத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்ததால், இயல்பாகவே தி.மு.கழகத் தொண்டர்கள் அவரிடம் பாசம் காட்டினார்கள். வைகோவுக்கு, கட்சியில் எழுந்த ஆதரவைக் கண்டு திடுக்கிட்ட கருணாநிதி, அவரை எவ்விதத்திலேனும் கட்சியில் இருந்து விரட்டத் திட்டமிட்டார்.

  1991 நவம்பர் 26 ஆம் தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டி வைகோவை கட்சியில் இருந்து நீக்க கருணாநிதி முடிவு செய்தார். அச்செயற்குழுவில் வைகோ மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி கருணாநிதி உரையாற்றினார். அவரின் அறிவுரையின்படி வேறு சிலரும் வைகோவைப் பற்றி அவதூறு பேசினார்கள், பின்னர் வைகோ தன்னிலை விளக்கம் அளித்தார். இவ்விளக்கத்தை கேட்ட கட்சியின் செயற்குழுவினரில் 99 விழுக்காடு உறுப்பினர்கள் வைகோவின் பக்கமே நியாயம் இருப்பதை உணர்ந்தனர். அங்கு நிலவிய நிலைமையை உணர்ந்து கொண்டு வைகோவை அன்று கட்சியிலிருந்து நீக்குவதை கருணாநிதி ஒத்தி வைத்தார். திமுகவின் செயற்குழுவில் தான் நினைத்ததை சாதிக்காதது கருணாநிதிக்கு அதுவே முதல்முறை.

  1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ‘வைகோவின் அரசியல் நலன்களுக்காக, விடுதலைப்புலிகள் தம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளார்கள்’ என்று ஒரு கொலைப்பழியைச் சுமத்தினார் கருணாநிதி. ஆனால், கருணாநிதியின் சுயநல, குடும்ப அரசியலைக் கண்டித்தும், வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர். உலகில் வேறு எந்த இயக்கத்திலும், கட்சித்தலைமையைக் கண்டித்து, இவ்வாறு தீக்குளித்த மடிந்ததாக வரலாறு இல்லை. ஆயினும், வைகோவைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி.

  தி.மு.கழகத்தின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், கருணாநிதியின் குடும்ப அரசியலைக் கண்டித்து, வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியதால், அவர்கள் அனைவரையுமே கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி.

  எனவே, கருணாநிதியால் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளைக் காப்பதற்காக, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாள், சென்னை தியாகராய நகரில் உள்ள ‘தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Karthick S
  First published: