தமிழக அரசின் சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அஞ்சலக வங்கிக்கு மாற்றும் அரசின் முடிவைக் கைவிட்டு, 12 ஆயிரம் வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வாழ்வைப் பாதுகாக்க வேண்டும் என ம
திமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து வைகோ விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசின் சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையினை, இந்திய அஞ்சலக வங்கிக்கு மாற்றும் அரசின் முடிவைக் கைவிட்டு, பனிரெண்டாயிரம் வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வாழ்வைப் பாதுகாக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் 1,2000 பேர் வணிகத் தொடர்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
முதியோர் உதவித் தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சமூக நலப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை வழங்கும் பணியினை, ஒவ்வொரு மாதமும் இவர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இந்தப் பணிகளில் அதிகளவில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வங்கிகள் அளிக்கும் ஊக்கத் தொகை மட்டுமே வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வாழ்வாதாரம் ஆகும். கிராமப்புற மக்களுக்கான வங்கிச் சேவைகள் அனைத்தும், இவர்கள் மூலம் மிக எளிதாகக் கிடைக்கின்றது.
கொரோனா பேரிடர் காலத்திலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கிராமப்புறங்களில் உள்ள வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று உதவித் தொகை வழங்கி வருகின்றார்கள். மேலும், கடந்த 15 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் முக்கிய நோக்கமான, அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்குத் தொடங்கிடும் சேவையை மிகச்சிறப்பாகச் செய்வதற்கு, வங்கித் தொடர்பாளர்கள் பெரிதும் காரணமாக இருந்துள்ளனர்.
இதுதவிர, ஆதார் எண் இணைக்கும் பணிகள், ஒன்றிய அரசு வழங்கும் 2 லட்சம் ஆயுள் காப்பீடு, 2 லட்சம் விபத்துக் காப்பீடு இவற்றை வழங்கிட மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தி, அவர்களை இணைத்து வருகின்றார்கள். கடந்த வருடம் மகளிருக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.1500-ஐ வீடு வீடாகச் சென்று வழங்கியதுடன், கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான ரூ.6000, தமிழக அரசின் மகப்பேறு உதவித் தொகை, தமிழக அரசின் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, 100 நாள் வேலை வாய்ப்பு ஊதியம் மற்றும் எரிவாயு மானியம் உள்ளிட்ட அரசின் அனைத்து உதவித் தொகைகளையும், இந்த வங்கித் தொடர்பாளர்கள் மூலம் பூஜ்ஜியம் கணக்கில் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது.
இதனை அஞ்சலக வங்கிக்கு மாற்ற முயலும் ஒன்றிய அரசின் கொள்கை முடிவானது, இதுவரை மிக எளிதாக மக்களுக்கு உதவித் தொகை வழங்கிடும் பணிகளில் சுணக்கம் ஏற்படுத்தும். மேலும், ஆயிரக்கணக்கான வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும். பத்து ஆண்டு காலமாக இதனை மட்டுமே நம்பி வாழும், அவர்களது குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்படும். ஆகவே, அரசின் உதவித் தொகையினை வழங்குவதற்கு, இந்திய அஞ்சலக வங்கிக்கு மாற்றும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
Must Read : தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது... தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய அறிவுரை
தமிழ்நாடு அரசும் ஏற்கனவே வழங்கி வரும் அரசின் உதவித் தொகையை, வங்கி வணிகத் தொடர்பாளர்களின் மூலமே தொடர்ந்து வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.