ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

லண்டனில் பென்னி குயிக் சிலை - தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

லண்டனில் பென்னி குயிக் சிலை - தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  லண்டனில் பென்னி குயிக்கிற்கு சிலை அமைப்பதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  லண்டன் ஃபிரிம்லேயில் உள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில், முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னி குயிக் உடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது.

  இங்கிலாந்து நாட்டு வழக்கப்படி, 100 ஆண்டுகள் கடந்து விட்டால், அந்தக் கல்லறை அகற்றப்பட்டு, அந்த இடம் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு விடும். அதன்படி, பென்னி குயிக் அவர்களுடைய கல்லறை அகற்றப்பட இருக்கின்றது என்ற செய்தியை அறிந்து, உத்தமபாளையத்தைச் சேர்ந்த சந்தன பீர் ஒலி, பென்னி குயிக் கல்லறையை அகற்றுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

  அதற்கு, பென்னி குயிக் செய்த சாதனை, அதற்காக அவரைத் தமிழகத்து மக்கள் எந்த அளவிற்குப் போற்றிப் புகழ்கின்றார்கள் என்பதற்கான சான்று ஆவணங்களைத் தர வேண்டும்.

  எனவே, அந்தத் தேவாலயத்தின் செயலர் சூ ஃபெரோ, மினிஸ்டர் சாரோன் பில்லிங் ஆகிய இருவரும், முல்லைப்பெரியாறு பாசனப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தனர். பொங்கல் திருநாளின் போது, முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் பென்னி குயிக் அவர்களுக்குச் செய்கின்ற சிறப்புகளை நேரில் பார்த்தனர்.

  இதுகுறித்துத் தங்கள் தேவாலய நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பென்னி குயிக் கல்லறையை அகற்றுவது இல்லை என அவர்கள் உடனடியாக முடிவு எடுத்து, அதற்கான கடிதத்தைத் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு மின் அஞ்சல் வழியாக அனுப்பி உள்ளனர்.

  இந்நிலையில், இருவரும் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தனர்.

  அப்போது பேசிய வைகோ, லண்டன் ஃபிரிம்லேயில் உள்ள பென்னி குயிக் கல்லறையைப் புதுப்பிப்பதற்கும், அங்கே அவருக்கு ஒரு சிலை அமைப்பதற்கும், தேனி பேருந்து நிலையம் முன்பும் ஒரு சிலை நிறுவிடவும் தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

  First published: