சமையல் எரிவாயு விலை ஏற்றி மக்களை கசக்கிப் பிழியும் மத்திய அரசு என்று வைகோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று காரணமாக முடங்கிய பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீள வழி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளை விலையை தாறுமாறாக உயர்த்தி இருக்கிறது.
பிப்ரவரி 4 ஆம் தேதிதான் சமையல் எரிவாயு விலை ரூ 25 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று இரண்டாவது முறையாக ரூ 50 உயர்த்தப்பட்டு சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ 785 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையைப் போன்று சமையல் எரிவாயு உருளையின் விலையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல சமையல் எரிவாயு விலையை உயர்த்திக் கொண்டு இருக்கின்றன. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 15 வரை மூன்று மாதத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ 125 அதிகரித்து உள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது.
மக்களை கசக்கிப் பிழிந்து வரும் மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 100ஐ நெருங்கிவிட்டது. டீசல் விலை ரூ 85 ஆக உயர்ந்துவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எண்ணெய் உற்பத்தி நாடுகளில் கொரோனா காலத்தில் உற்பத்தி குறைந்ததுதான் காரணம் என்று நாடாளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருக்கின்றார்.
Also read... நீதிபதிகளை அவதூறாக பேசிய வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைவதில்லை. அதற்கு காரணம் சில்லறை விற்பனையில் மத்திய அரசு 61 விழுக்காடு வரி விதிக்கிறது. மாநில அரசு 56 விழுக்காடு வரியைத் தன் பங்காக விதிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தால் அவற்றின் சில்லறை விற்பனை விலையை குறைக்க முடியும். ஆனால் மக்கள் விரோத மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டில் உள்ள அதிமுக அரசும் மக்கள் மீது சுமையை ஏற்றுவதில் போட்டி போடுகின்றன.
சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை ரத்து செய்வதுடன், பெட்ரோல், டீசல் மீதான வரிகளையும் மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்றும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mdmk leader vaiko