மதுரை ஆதீனகர்த்தர் மறைந்தது தமிழ் மக்களுக்கும், சைவப் பற்றாளர்களுக்கும் பேரிழப்பு என வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீன மடத்தின் 292வது குருமகா சன்னிதான பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (77). இவர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மதுரை ஆதீனம் காலமானார்.
மதுரை ஆதீனத்தின் மறைவுக்கு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்து இரங்கலில், “சைவமும், தமிழும் இரு கண்கள் என்று போற்றிய மதுரை ஆதீனத்தின் 292 ஆவது மகா சன்னிதானம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், ஆராத் துயரமும் கொண்டேன்.
1500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் மதுரையில் தோற்றுவிக்கப்பட்ட பழம் பெருமை வாய்ந்த மதுரை ஆதீனத்தின் இளையவராக 27.5.1975 இல் பொறுப்பு ஏற்ற அருணகிரிநாதர் 14.03.1980 அன்று மதுரை ஆதீனமாகப் பொறுப்பு ஏற்றார்.
அருணகிரிநாதர் அவர்கள், சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் தமிழகத்தில் மட்டும் அல்லாது, சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, ஹாங்காங், ரஷ்யா ஆகிய அயல் நாடுகளிலும் சைவ சித்தாந்தத்தின் சிறப்புகளையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி பிரச்சாரம் செய்தார்.
1981 ஆம் ஆண்டில் தென்காசி மீனாட்சிபுரத்தில் மத மாற்றம் காரணமாக மதக் கலவரம் வெடித்துக் கிளம்பும் சூழ்நிலையை அறிந்து, அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அனைத்து மக்களையும் சந்தித்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியவர் அருணகிரிநாதர். மீனாட்சிபுரத்தில் உள்ள ஆதி திராவிட மக்களோடு அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார். அந்த விருந்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பெஜாவர் மடத்தின் பீடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி போன்றவர்களும் கலந்துகொண்டது வரலாற்றுச் சிறப்புக்கு உரிய நிகழ்வு ஆகும்.
1981, 1982 ஆம் ஆண்டுகளில், குமரி மாவட்டம் - மண்டைக்காடு பகுதியில் இந்து - கிறிஸ்தவர்களிடையே மதக் கலவரம் ஏற்பட்டு, துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்ட கலவரமான அந்தக் காலத்தில் நான்கு மாத காலம் அங்கேயே தங்கியிருந்து, அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சமாதானம் செய்து வைத்ததோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதுரை ஆதீனத்தின் சார்பில் உணவும், உடையும் மருந்துப் பொருள்களும் வழங்கிய மனிதநேயத்திற்கு சொந்தக்காரர்தான் மதுரை ஆதீனம்.
1983 ஆம் ஆண்டில், இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வெட்டிக் கொல்லப்பட்டபோதும், அங்குள்ள சிவாலயங்கள் இடித்து நொறுக்கப்பட்டபோதும் அதனைக் கண்டித்து மதுரை வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் இரண்டு முறை உண்ணாவிரதம் இருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டு இருந்தார்.அவ்வப்போது அலைபேசியில் அழைத்துப் பேசுவார். எண்பதுகளில் தொடங்கி, அவருடன் பல நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கின்றேன்.
“மொழிப்போராட்டத்திலும், தமிழர் நலன் காக்கும் போராட்டங்களிலும் முனைப்புடன் ஈடுபட்டு வரும் வைகோ அவர்களை விட்டுவிட்டுத் தமிழக வரலாற்றை எழுத முடியாது” என்றும், “என்னுடைய வழிகாட்டியாக இந்தி எதிர்ப்பு காலம் தொட்டு வைகோ விளங்குகிறார்” என்றும் பல மேடைகளில் என்னைப் பாராட்டியும், என் மீது அளவு கடந்த அன்பு செலுத்தியும் வாழ்ந்த மதுரை ஆதீனகர்த்தர் மறைந்தது தமிழ் மக்களுக்கும், சைவப் பற்றாளர்களுக்கும் பேரிழப்பு ஆகும்.
அளவற்ற அவரது அரும்பணிக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் வீர வணக்கத்தையும், புகழ் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Death, Madurai Adhinam, MDMK, Mdmk leader vaiko, Vaiko