2001, 2006 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்
மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும்
ஜெயலலிதாவின் நன் மதிப்பிற்குரியவர். மக்களிடம் நேர்மையான, எளிமையான அரசியல்வாதி என்ற பெயரையும், கட்சியினரிடையே கடின உழைப்பாளி, உண்மையான சமூக சிந்தனையாளர் என்ற பெயரையும், இலக்கியவாதிகளிடம் மேடைக் கலைவாணர் என்ற பெயரையும் பெற்றவர். இந்தநிலையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த நன்மாறன் (72) நேற்றிரவு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார்.
நன்மாறன் மறைவுக்கு பலரும் வேதனை தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தோழர் நன்மாறன் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். ஹார்வி மில் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, மாணவப் பருவத்திலேயே பொது உடைமைக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, அதற்காகவே தன் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டார். எளிய வாழ்க்கை மேற்கொண்டார்.
1973 விலைவாசிப் போராட்டத்தில் 3 மாதங்கள் சிறைவாசம் ஏற்றவர். அதன்பிறகு, கட்சி நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று, பலமுறை கைதாகி இருக்கின்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். மதுரை கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்வு பெற்று, பத்து ஆண்டுகள் பணி ஆற்றி இருக்கின்றார். எண்ணற்ற முறை சந்தித்து இருக்கின்றேன்.
தலைசிறந்த சொற்பொழிவாளர்; அதனால், மதுரை மக்களால் மேடைக் கலைவாணர் என அழைக்கப்பட்டார். சிறந்த எழுத்தாளர். தீக்கதிர் நாள் இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். பாரதி பாடிய பாப்பா பாடல்கள் போல, குழந்தைகளுக்காக நிறையப் பாடல்களை இயற்றி இருக்கின்றார். பழகுதற்கு இனிய பண்பாளர் தோழர் நன்மாறன் மறைவுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், உற்றார், உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.