ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் அடாவடித்தனம்! வைகோ கண்டனம்

ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் அடாவடித்தனம்! வைகோ கண்டனம்

வைகோ

வைகோ

தமிழக அமைச்சரவை ஏற்கனவே அனுப்பிய முடிவினை ஏற்று ஏழு பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  ஏழு பேர் விடுதலையில் தமிழக ஆளுநரின் செயல்பாடு அடாவடித்தனம் என்று வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, இராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேர், கடந்த 28 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடுகின்றனர்.

  குற்றமற்ற நிரபராதிகளான இவர்களின் வாழ்க்கையே நிர்மூலமாக்கபட்டது. இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யலாம். விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று மூவர் மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு அளித்தபோதே அன்றைய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தெரிவித்து இருந்தார்.

  ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முடிவெடுத்து, மத்திய அரசுக்கு தெரிவித்தபோது, மத்திய மைய அரசு முட்டுக்கட்டை போட்டது. விடுதலை செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தை நாடியது.

  உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்களின் அமர்வு, ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு, மத்திய அரசின் ஆட்சேபனைகளை நிராகரித்துவிட்டு இந்திய அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று 2018 செப்டம்பர் 6-ல் தீர்ப்பளித்தது.

  செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு முடிவெடுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. தமிழக ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரையை செயல்படுத்தாமல், ஏழு பேரையும் விடுதலை செய்ய முன்வரவில்லை.

  இவர்கள் விடுதலை குறித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் கருத்து கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. மத்திய அரசிடம் இதுபற்றி கருத்து கேட்க வேண்டிய அவசியம் சட்டரீதியாக அறவே கிடையாது.

  அப்படியானால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் இதுகுறித்து ஆளுநரே நேரடியாக கருத்துக் கேட்டாரா? அல்லது தமிழக அமைச்சரவை மூலம் கருத்து கேட்டாரா? என்பதுதான் எழுந்துள்ள கேள்வியாகும்.

  மாநில அரசு அப்படி கருத்து கேட்டிருந்தால் அது சட்டத்திற்கும், நீதிக்கும் விரோதமான மோசடி நடவடிக்கையாகும். அதனால்தான் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை என்னுடைய தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து நடத்தி கைது செய்யப்பட்டோம்.

  உச்சநீதிமன்றத்தில் ஏழு பேர் விடுதலையை எதிர்த்து மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு இன்று (09.05.2019) தள்ளுபடி செய்துவிட்டது. இதுபற்றிய பிரச்னை தமிழக ஆளுநரிடம் இருக்கிறது. அங்கு முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

  தமிழக அமைச்சரவை ஏற்கனவே அனுப்பிய முடிவினை ஏற்று ஏழு பேரையும் தமிழக ஆளுநர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’’ என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Vaiko