உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், 3 வாரங்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ்-வின் வடக்கு பகுதியில் உள்ள ஒபோலோன்ஸ்கியில் 9 மாடி கட்டடத்தின் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியதில் கட்டடம் தீ பிடித்து உருக்குலைந்தது. கட்டடத்தில் இருந்த இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை ராணுவ வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதல் மற்றும் போர் வியூகங்களை 3 வகையாக மாற்றி அமல்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதன்படி உக்ரைனின் ராணுவ நிலைகள் மீது குண்டுவீசி தாக்கவும் சிறிய நகரங்களை தகர்க்கவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.
இந்தநிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ‘உக்ரைன் மீது ரஷ்யா நடத்துகின்றத் தாக்குதல் நியாயம் அற்றது. உக்ரேனியர்கள் வீரம் மிக்கவர்கள். எத்தகைய தாக்குதல் என்றாலும் தாக்குப் பிடிப்பார்கள். கடந்த காலங்களில், ரஷ்யா மீது, பிற நாடுகள் படையெடுத்தபோது, முன்களப் போராளிகளாக நின்று, அதைத் தடுத்து நிறுத்தியவர்கள் உக்ரேனியர்கள்தான்.
ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை
கடந்த இருபது நாட்களாகப் போர் தொடர்கின்றது. இதற்கு முன்னர், உலகில் பல இடங்களில் இப்படிப்பட்ட மோதல்கள் நடைபெற்றபோதெல்லாம், இந்தியா நடுநிலைமை நாடுகளுக்குத் தலைமை தாங்கி, அணி சேராக் கொள்கையை நிலை நிறுத்தியது. அதனால், இந்தியாவின் மதிப்பு உலக நாடுகள் இடையே உயர்ந்து ஓங்கி இருந்தது. ஆனால், இம்முறை இந்தியா ஒரு பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றது.
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடர்பாக ஐ.நா மன்றத்தின் பாதுகாப்புச் சபையிலும், பொதுச்சபையிலும், விவாதம் எழுந்தபோது, இந்திய அரசு, தன் கடமையைச் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றேன்’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.