தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து வைகோ எம்.பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
2009-ம் ஆண்டில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடந்தாண்டு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 5-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வைகோ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஓராண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மறுநாள் அவர் மாநிலங்களவை தேர்தலுக்கு மனுதாக்கல் செய்ய வேண்டியது இருந்ததால், இந்த தீர்ப்பு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.
ஓராண்டு மட்டுமே சிறை தண்டனை என்பதால் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறினர்.
இதற்கிடையே, தீர்ப்பு வழங்கிய உடனேயே, மேல்முறையீடு செய்யப்போவதால், தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனு அளித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தனது தீர்ப்பை ஒரு மாதம் நிறுத்தி வைத்தார்.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த மனுவில், தேச துரோக குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் யூகங்களின் அடிப்படையிலேயே தன்னை குற்றவாளி என தீர்மானித்து சட்டத்திற்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
காவல்துறை சமர்ப்பித்த ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் அடிப்படையிலான தீர்ப்பாக இல்லாமல் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தனிப்பட்ட முடிவாக இந்த தீர்ப்பு இருப்பதாகக் கூறியுள்ள வைகோ, பேச்சுரிசை, கருத்து சுதந்திரத்தின் படி தான் பேசியவற்றை தேச துரோக குற்றச்சாட்டுடன் தவறாக பொருத்தி விளக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிகபட்ச தண்டனை கேட்டிருந்த நிலையில், குறைந்தபட்ச தண்டனை கேட்டதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டு கையெழுத்திட்டிருந்தார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பின்னர் அந்த பத்தியை நீக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள வைகோ, . நீதிபதியின் இந்த செயல்பாடு குற்ற விசாரணை முறைச் சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார். .
தனது பேச்சு காரணமாக தமிழக மக்களின் மனநிலை ஆவேச நிலையில் இருந்தது என்பதற்கோ, மத்திய - மாநில அரசுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்தது என்பதற்கோ எவ்வித ஆதாரங்களையும் காவல்துறை தாக்கல் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.