ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு - மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

மூர்க்கத்தனமான இந்தித் திணிப்பு - மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  மத்திய பா.ஜ.க. அரசு அனைத்துத் துறைகளிலும் மூர்க்கத்தனமாக இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

  இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.

  மத்திய அரசு அலுவலகக் கோப்புகள், கடிதத் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியில் இருப்பதை இந்தி மொழிப் பிரிவு கவனிக்க வேண்டும்.

  மத்திய அரசின் இந்த உத்தரவுப்படி சென்னையில் உள்ள பொருட்கள் மற்றும் சேவை வரி ஆணையர் தலைமை அலுவலகத்தில் இந்திப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

  இந்தப் பிரிவில் உதவி ஆணையராக தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பாலமுருகன் என்பவரும், கண்காணிப்பாளராக சுகுமார் என்பவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

  Also read... அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிராக அண்ணா பல்கலை..க்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியானது

  மேலும் இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஆய்வாளர் ஒருவரும், வரி உதவியாளர் ஒருவரும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தி மொழி அறியாத ஆணையரும், கண்காணிப்பாளரும் ஆய்வாளர் உதவியுடன் இந்தி கோப்புகளில் உள்ளவற்றை அறிந்து கையொப்பமிட்டு வருகின்றனர்.

  இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தி மொழி அறிந்த ஆய்வாளர் ரஞ்சன் தய்யா என்பவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தற்போது தமிழை தாய் மொழியாகக் கொண்ட விஜயகுமார் என்பவர் ஆய்வாளர் பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

  ஜி.எஸ்.டி ஆணையர் தலைமை அலுவலகத்தில் உள்ள இந்தி மொழிப் பிரிவில் பொறுப்பிலுள்ள மூவரும் இந்தி எழுதப்படிக்க தெரியாதவர்கள் ஆவர்.

  இதே ஆணையர் அலுவலகத்தில் வட நாட்டைச் சேர்ந்த பலர் பணியில் இருக்கும் போது அவர்களை இந்தி பிரிவில் நியமனம் செய்யாமல், இந்தி தெரியாத தமிழர்களை நியமனம் செய்து இருப்பது பாஜக அரசின் திட்டமிட்ட இந்தி மொழித் திணிப்பை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

  இதுகுறித்து உதவி ஆணையர் பாலமுருகன், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரியத்தின் தலைவருக்கு எழுதியுள்ள புகhர் கடிதத்தின் மூலம், பாஜக அரசு தமிழர்கள் மீது இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டும் வெறித்தனம் வெளிப்பட்டுள்ளது. இது மிகவும் கடும் கண்டனத்துக்கு உரியது.

  தமிழரான உதவி ஆணையர் பாலமுருகன் புகார் தெரிவித்துள்ளதால், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து மிரட்ட முனையாமல், கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு உணர வேண்டும்.

  தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் ஆட்சி மொழி என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.

  தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் திரு மணியரசன் அவர்கள், கhவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி விளக்கம் கேட்டு எழுதிய மடலுக்கு இந்தி மொழியிலேயே பதில் அனுப்பியிருக்கிறார்கள்.

  இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கும் பாஜக அரசின் இத்தகைய மோசமான நடவடிக்கைகள் தமிழர்களை மேலும் மேலும் கொதிப்படையச் செய்கிறது என்பதை இந்தி ஆதிக்கவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழகம் பாஜக அரசுக்கு புரியவைக்கும் என்றும் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Mdmk leader vaiko