VK Sasikala : சசிகலாவுக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

Youtube Video

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை முடிந்து சசிகலா தமிழகம் திரும்பினார். வழிநெடுகிலும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருக்கிறார்.

  • Share this:
    சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூரில் ஓய்வெடுத்து வந்த சசிகலா திங்கட்கிழமை காலை 7.45 மணியளவில் தமிழகம் புறப்பட்டார். முன்னதாக அவர் தங்கியிருந்த விடுதியில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமும் அவருக்கு வழங்கப்பட்டது. அதன்பின் காரில் புறப்பட்ட சசிகலாவை அங்கு கூடியிருந்த தொண்டர்கள் வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.

    தொண்டர்களை பார்த்து சசிகலா கைகூப்பி வணங்கினார். சசிகலா செல்லும் காருக்கு முன்னாள் பெண்கள் பூசணிக்காய் உடைத்து, ஆரத்தி எடுத்து வழியனுப்பினர். பெங்களூரில் இருந்து சசிகலாவுடன் நூற்றுக்கணக்கான கார்களில் தொண்டர்கள் அணிவகுத்தனர். வழிநெடுகிலும் சசிகலா காரில் இருந்தபடியே தொண்டர்களை கையெடுத்து கும்பிட்டார்.

    காலை 10.20 மணியளவில் தமிழக எல்லையான ஜூஜூவாடிக்கு சசிகலாவின் கார் வந்தது. அப்போது எல்லையில் காத்திருந்த அமமுக தொண்டர்கள் சசிகலா காரை பார்த்தவுடன் கர்நாடக எல்லைக்குள் படையெடுத்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் காத்திருந்தன. அங்கு சசிகலாவுக்கு மலர் தூவி பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. வழியெங்கும் வாழைமரத் தோரணங்களும், பேனர்கள் காட்சியளித்தன.

    ஒசூரில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் சசிகலா வழிபாடு நடத்தினார். அங்கு காளைகளை நிறுத்தி வைத்தும், பூரணகும்ப மாரியாதையுடனும் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    சசிகலாவின் கார் கிருஷ்ணகிரி சென்றடைந்த பிறகும் ஒசூரில் போக்குவரத்து இயல்பு நிலை திரும்ப நீண்ட நேரம் ஆனது. அதன்பின் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் சசிகலாவிற்கு கரகாட்டத்துடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சசிகலாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டம், மேள தாளங்களுடன் 14 இடங்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. சசிகலா காரை பைக்கில் துரத்தி வந்த இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், இளைஞரின் விருப்பதை ஏற்று அவருடன் சசிகலா செல்பி எடுத்துக் கொண்டார்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச் சாவடி அருகே முன்னாள் எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியன் தலைமையில் சசிகலாவிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. அங்கு காரில் அமர்ந்திருந்தவாறே செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அன்புக்கும், மக்களுக்கும் தான் அடிமை என்றும் அடக்குமுறைக்கு அடிபணியப்போவதில்லை என்றும் தெரிவித்தார். அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாகவும் அவர் உறுதிபடக் கூறினார்.

    தொடர்ந்து ஆம்பூர், ராணிப்பேட்டை, வேலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் தொண்டர்களின் வரவேற்புக்கு மத்தியில் சசிகலா காலை 6.15 மணியளவில் சுமார் 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சென்னைக்கு வந்தடைந்தார்.

     


    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: