Tamil Nadu Local body elections Results 2022: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், முறைகேடு புகார் காரணமாக,
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சிக்கான தேர்தல் ரத்துசெய்யப்பட்டது. மேலும், வேட்பாளர்கள் இறப்பு காரணமாக 6 வார்டுகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 12,820 பதவிகளுக்கான தேர்தலில் 218 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். ஒரு வார்டில் வேட்பாளர்கள் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள இடங்களுக்கு சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 60.7 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குகளை எண்ணுவதற்காக 268 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்குகள் அனைத்தும் வேட்பாளர்கள் அல்லது முகவர்களிடம் காண்பித்தபிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகு, பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவரப்படும்.
வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில், வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல் அகற்றப்படும். வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காட்டப்படும் எண்ணிக்கையும் சரியாக உள்ளதா என்பது உறுதிசெய்யப்படும்.
தமிழகம் முழுவதும் 268 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், சென்னை மாநகராட்சியில் மண்டலத்துக்கு ஒன்று என்ற அடிப்படையில், 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் குறைந்தபட்சம் 8 மேஜைகளும், அதிகபட்சமாக 14 மேஜைகளும் அமைக்கப்படும்.
ஒவ்வொரு வார்டுக்கும் இரண்டு அல்லது மூன்று சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வேட்பாளர்களின் தலைமை முகவர்கள் மட்டுமே செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
முகவர்கள் அனைவரும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தபால் வாக்குகளில் தொடங்கி, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கும் வரை, அனைத்து நடவடிக்கைகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:
மாநகராட்சி - 21
நகராட்சி - 138
பேரூராட்சி - 490