Home /News /tamil-nadu /

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்.... சனிக்கிழமையும் தாக்கல் செய்யலாம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்.... சனிக்கிழமையும் தாக்கல் செய்யலாம்

மாநில தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம்

Urban Local Body Election : சனிக்கிழமையும் அரசு அலுவலகங்களுக்கு வேலை நாள் என்பதால், அன்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் (Nomination) இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதை முன்னிட்டு, மாநகராட்சி மைய அலுவலகங்களில் இருந்து, மண்டல அலுவலகங்களுக்கு விண்ணப்ப படிவங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. மேலும் வேட்புமனு தாக்கலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வரும் சனிக்கிழமையும் (நாளை) அரசு அலுவலகங்களுக்கு வேலை நாள் என்பதால், அன்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சென்னையில் ஒரு மண்டலத்தில் மூன்று வாகனம் வீதம் 45 வாகனங்கள் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த பறக்கும் படை வாகனங்களை சென்னை மாநகராட்சி அலுவலகத்திலிருந்து ஆணையர் ககன்தீப் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக சென்னையில் 37 தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

    கோவை மாநகராட்சியில் வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக, 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் எதிரொலியாக, திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன.

    இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை வார்டுகள் ஒதுக்குவது?, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் பணி செய்வது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    அதிமுக இன்று மாலை 5 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு கூறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

    இதேபோன்று அதிமுகவுடன் வார்டு பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து பாஜக இன்று ஆலோசனை நடத்த உள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக பாமக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் இன்று ஆலோசனை நடத்த உள்ளன.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுக தனித்துப் போட்டியிட உள்ளதாகவும், அதிமுகவினர் தைரியம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.

    Read More : ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு நீக்கம் - தமிழக அரசு அறிவிப்பு

    இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Must Read : ஊரடங்கில் நீட்டிக்கப்பட்டுள்ள தடைகள் என்னென்ன?

    இதுவரை நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வழங்கிய கால அவகாசத்தை போல் இந்த தேர்தலிலும், வழங்கினால்தான், அனைத்து வேட்பாளர்களும் தங்களை தயார் செய்து கொள்ள ஏதுவாக அமையும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Local Body Election 2022

    அடுத்த செய்தி