தமிழ்நாட்டில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனையின் போது 2,062 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14,324 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். 218 பதவிகளுக்கு வேட் பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சி, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிகளில் வேட்பாளர்கள் மரணம் காரணமாக தொடர்புடைய வார்டுகளில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 12,500க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு, 57,600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் நடத்தை விதிகளின்படி முடித்துக்கொள்ள வேண்டும். அதன்படி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்நிலையில், 6 மணிக்கு பிறகு, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர் அல்லாத, வெளியாட்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அனைவரும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படலாம் என்பதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையல், சென்னையில் 45 பறக்கும் படை குழுக்கள் கண்காணித்து வந்த நிலையில், கூடுதலாக 45 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Read More : TNPSC Group - II தேர்வு தேதி எப்போது? தேர்வாணையம் அறிவிப்பு
தேர்தல் நடக்கும் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றி 5 கிலோ மீட்டர் வரையுள்ள பகுதிகளில் இன்று முதல் 19ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்களிக்க வசதியாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. அத்துடன், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மை, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Must Read : இன்று இரவு, நாளை காலை தவறுகள் நடக்க வாய்ப்பு அதிகம் - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக, சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 500 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, தமிழகம் முழுவதும் சுமார் 80 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.