கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவும், தலைமைக்கு எதிராகவும் போட்டியிடும் நிர்வாகிகள் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்றது. 21 மாநகராட்சிகளில் கும்பகோணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் 20 மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக நேற்று வெளியிட்டது. ஏறக்குறையை இவர்கள்தான் மேயர் என்ற நிலை இருந்தது. அதேபோல் நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. கடலூரில் உட்கட்சி பூசல் விவகாரம் வெடித்தது.
Also Read: இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மேயரை 'கலாய்த்த' அமைச்சர் நேரு - பதவியேற்பில் சிரிப்பலை
கடலூர் மேயர் வேட்பாளராக சுந்தரி ராஜாவை திமுக தலைமை அறிவித்தது இந்நிலையில் சுந்தரியை எதிர்த்து கீதா குணசேகரன் என்பவர் மேயர் தேர்தலில் போட்டியிடுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில்தான் கடலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுந்தரி சுமார் 15 திமுக கவுன்சிலர்களை கடந்தி வந்து விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் அடைத்து வைத்ததாக தகவல். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாரின் காலில் விழுந்து கவுன்சிலர்கள் கண்ணீர் விட்ட காட்சிகள் எல்லாம் அரங்கேறியது.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நகர் மன்ற தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி சார்பாக 22வது வார்டு கவுன்சிலர் சற்குணம் என்பவர் நிறுத்தப்பட்டார். இந்நிலையில் நகர்மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 10வது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருப்பெரும்புதூர், கருமத்தம்பட்டியிலும் இதே நிலைதான்.
Also Read: திமுக கவுன்சிலர்கள் கடத்தல்.. வெடித்த கோஷ்டி பூசல்.. மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி.. பரபரக்கும் கடலூர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி விடுதலை சிறுத்தை கட்சிக்கு அறிவித்திருந்த நிலையில், திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். இதேபோல, தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரத்திலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதன்காரணமாக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் டி ஆர் பாலுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில், கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவும், தலைமைக்கு எதிராகவும் போட்டியிடும் நிர்வாகிகள் தொடர்பாக ஆலோனை நடந்ததாக தெரிகிறது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்களின் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் மற்றும் பொறுப்பு நிர்வாகிகளை தொடர்புகொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.