பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான முன்னோடி... தமிழில் ட்விட் செய்து பாரதியை நினைவுகூர்ந்த அமித்ஷா

பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான முன்னோடி... தமிழில் ட்விட் செய்து பாரதியை நினைவுகூர்ந்த அமித்ஷா

அமித்ஷா

பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடியாக பாரதியார் இருந்துள்ளார் என்று பாரதியாரின் புகைப்படத்தைப் பதிவிட்டு தமிழில் ட்விட் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைவுகூர்ந்துள்ளார்.

 • Share this:
  தமிழ்க் கவிதைகளுக்குப் புத்துயிர் கொடுத்து, எளிமையாக உருவாக்கி புதிய பாதையை அமைத்தவர் எட்டயபுரத்து முண்டாசு கவிஞர் பாரதியார். “எமக்குத் தொழில் கவிதை... இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று அறைகூவல் விடுத்த அவர், பிறமொழி இலக்கியம், உலக இலக்கியம், நாட்டு நடப்பு, அரசியல் அறிவு என பரந்த உலகப் பார்வையுடன் நுட்பமான திறன்களையும் பெற்றிருந்தார். பாரதியின் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பகவத் கீதை உரை போன்றவை அவரது அழியாப் புகழுக்குக் கட்டியம் கூறுகின்றன. கண்ணனை சிறுகுழந்தையாகவும் நண்பனாகவும், சேவகனாகவும் காதலியாகவும் குருவாகவும் வர்ணித்தவர் பாரதி. பாரதியின் பல பாடல்கள் இசை ராகத்துடன் இணைந்து எழுதப்பட்டவை என்பதால் திரைப்படப் பாடல்களாக இவை அவ்வப்போது செவிக்கு இன்பம் தந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. சுதந்திரப் போராட்டத்தில் பாரதியின் பாடல் வரிகள் புதிய எழுச்சியை ஏற்படுத்தின. இளைஞர்கள் அந்தப் பாடல்களைக் கேட்டு வீறுகொண்டு எழுந்தனர்.

  சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் போன்ற சமூக அவலங்கள் கட்டுக்கடங்காமல் இருந்த பாரதியார் வாழ்ந்த காலத்தில், அவருடைய ஒவ்வொரு கவிதைகளும் இத்தகைய சமூக அவலங்களை விரட்டும் சாட்டையாக இருந்தன. அவருடைய ‘தனிமனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’... ’பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ?’ என்ற வரிகள் சிறு குழந்தைகளையும் சென்றடைந்தவை. அவருடைய பிறந்தநாள் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டுவருகிறது.

  அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு வானவில் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் இன்று பன்னாட்டு பாரதி திருவிழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தநிகழ்ச்சியில், மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு பாரதி குறித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

  இந்தநிலையில், பாரதியாருக்கு தான் மாலை அணிவித்த புகைப்படத்தைப் பதிவிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட் செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி. இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார்.


  பாரதி, தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: